
கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்ட இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகமும் கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை விருந்துபசரிப்புடன் கோலாகலமாகக் கொண்டாடியது.
ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த கொண்டாட்டத்தில் உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சர் சைபுடின் நசுதியோன் மலேசியா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. பக்காத்தான் கூட்டணி, தேசிய முன்னணியைச் சார்ந்த முக்கிய இந்தியத் தலைவர்கள் பலரும் இந்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.

இரு அணிகளின் தொண்டர்களும் களத்தில் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்க, இரு முனைகளிலும் உள்ள இந்தியத் தலைவர்கள் ஒன்றாகக் கலந்துரையாடி தங்களின் ஒற்றுமையையும், அரசியல் நல்லிணக்கத்தையும் காட்டியது வித்தியாச காட்சியாக அமைந்தது.
அமைச்சர்கள் குலசேகரன், சேவியர் ஜெயகுமார், துணையமைச்சர் ஆர்.சிவராசா, பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், ஜபிஎப் கட்சியின் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் ஆகியோரும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.





-செல்லியல் தொகுப்பு