Home வணிகம்/தொழில் நுட்பம் பொருளாதாரத்தில் ஆசியாவின் புதிய ‘புலி’ – வியட்னாம்

பொருளாதாரத்தில் ஆசியாவின் புதிய ‘புலி’ – வியட்னாம்

1256
0
SHARE
Ad

ஹனோய் – ஒரு நாடு பொருளாதாரத்திலும் அரசியல் வலிமையிலும் உருவெடுக்கும்போது அந்நாட்டை ‘புலி’ என வர்ணிப்பார்கள். அந்த வகையில் ஆசியாவின் புதிய பொருளாதார வலிமைமிக்க நாடாக – புலியாக – வியட்னாமை வர்ணிக்கிறது கத்தார் தேசிய வங்கி.

2018-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்னாமின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது என்பதை பல அம்சங்கள் சுட்டிக் காட்டுகின்றன என வியட்னாம் நியூஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு உயர்வு கண்டு, இந்த ஆண்டு 7.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிக விரைவான வளர்ச்சியாகும். வியட்னாமின் தொழில்துறை உற்பத்தி 13.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதன்காரணமாக, 2017-இல் 17 விழுக்காடாக உயர்ந்த வியட்னாமின் ஏற்றுமதி, இந்த ஆண்டில்  20 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கெல்லாம் முக்கியமான அடிப்படைக் காரணம் ஆடைத் தயாரிப்புத் தொழில், காலணிகள் தயாரிப்பு, மின்னியல் ஆகிய துறைகளில் மிகப் பெரிய வெளிநாட்டு மூலதனத்தை வியட்னாம் ஈர்த்தது ஆகும்.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே 13 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு மூலதனத்தை வியட்னாம் பெற்றுள்ளது.

பல வளர்ச்சியடைந்த நாடுகள் பொருளாதாரத் துறையில் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் வியட்னாமின் இந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சி நிகழ்ந்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்று எனவும் கத்தார் தேசிய வங்கி சுட்டிக் காட்டியிருக்கிறது.