கோலாலம்பூர் – சிரம்பானில் அமைந்துள்ள, நாதஸ்வரூபி நுண்கலை மையமும், தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் உலகத் தமிழிசை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்யும் “உலகத் தமிழிசை விழா”, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 19-ஆம் நாள், இராசா ரோட், சிரம்பானில் அமைந்துள்ள இராசா மகா மாரியம்மன் கோயிலில் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. மலேசியத் திருநாட்டில், தமிழுக்காக எடுக்கப்படும் முதல் தமிழிசை விழா இதுவாகும்.
நாதஸ்வரூபி நுண்கலை மையம் கடந்த 10 ஆண்டுகளாக சிரம்பான் நகரில் செயல்பட்டு வருகின்றது. நம் நாட்டின் இசைத்துறை வளர்ச்சியிலே அக்கறை கொண்ட இந்த இயக்கம் தமிழ் இசையில் திறன் பெற்ற அடுத்தத் தலைமுறையை உருவாக்குவதில் மிகுந்த முனைப்புக் காட்டி வருகின்றது.
சங்க காலம் முதற்கொண்டே தமிழிசை, தமிழர்களால் கையாளப்பட்டு வந்துள்ளது. வரலாற்றின் அடிப்படையில் பல இன்னல்களையும் சவால்களையும் தாண்டி இன்றும் சாகா வரம் பெற்று வாழ்ந்து வருகின்றது.
மலேசிய நாட்டில் மிகவும் குறைவாக வழக்கத்தில் காணப்படும் தமிழிசைக்கு உயிரூட்டி இளம் கலைவாணர்களுக்குத் தமிழிசையின் பால் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் உயரிய நோக்கில் இவ்விழா இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழிசைக்கு மேலும் மெருகூட்டி அதன் முக்கியத்துவத்தையும் மாண்பையும் வளர்ந்து வரும் இளம் கலைவாணர்களுக்குக் காட்ட வேண்டும் எனும் உயரிய நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழிசை மூவர் அல்லது தமிழிசை மும்மூர்த்திகள் என அழைக்கப்படும், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை எனும் மூன்று பெருமக்களுக்கு இவ்விழா படையலாக்கப்படுகிறது.
நாடளாவிய நிலையில் இயங்கி வரும் இசைப் பள்ளிகளும் நடனப் பள்ளிகளும் இவ்விழாவிற்கு வற்றாத ஆதரவு வழங்கியுள்ளன. இவற்றுள் சுமார் 20 பள்ளிகள் இவ்விழாவிலே பங்கேற்கவுள்ளன. இப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து, தமிழிசை மூவரின் பாடல்கள், திருமுறை, காவடிச்சிந்து, இவற்றோடு, புகழ்பெற்ற பிற தமிழிசைப் பாடல்களை, வாய்ப்பாட்டு, நடனம் மூலமாகப் படைக்கவிருக்கின்றனர். இவர்களுக்குப் பக்க வாத்தியங்களாக மிருதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளை நம் நாட்டின் புகழ் பெற்ற இசை வல்லுனர்கள் இசைக்கவுள்ளனர்.
உலகத் தமிழிசை நிறுவனத்தின் தோற்றுனர், இசைக்கலைமணி திரு. ஆரோ ரோபின் ஸ்டாலின் அவர்களின் அரும் முயற்சியில் முதல் தமிழிசை விழா, இலண்டனில் நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரத்திலும், தற்போது மூன்றாவது முறையாக மலேசியாவிலும் நடைபெறவுள்ளது என்பது மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை என்றால் மிகையல்ல. இந்தத் தமிழிசை விழா, நாதஸ்வரூபி நுண்கலை மையத்தின் தோற்றுனர் இசைக்கலைமணி கார்த்திகேயன் கணபதி, அதன் முதல்வர் திருமதி நவமலர் கார்த்திகேயன் இருவரின் அரும் முயற்சியில் மிகவும் சீராக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
தமிழிசை வளர்ச்சிக்கும், சமய வளர்ச்சிக்கும் மாணவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும் முக்கியத்துவமளித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தமிழிசை விழாவில் – நம் மரபிசையை உலகில் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் விழாவில் – கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.
காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெறவுள்ள இவ்விழா முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்கப்படும். பொது மக்கள் திரளாக வந்து தமிழிசைத் தேனைப் பருகிச் செல்ல, ஏற்பாட்டுக் குழுவினர் அகமகிழ வரவேற்கின்றனர்.