புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 8.00 மணி நிலவரம்) கடந்த 9 வாரங்களாக புதுடில்லி ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் இருந்து வருகிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று புதன்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் செயல்பட மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல முக்கியத் தலைவர்கள் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் குழுமியுள்ளனர்.
சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனை வந்து வாஜ்பாயின் உடல் நலம் கண்டறிந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாஜ்பாய் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதியும் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
ஓரு சிறந்த கவிஞரும் பேச்சாளருமான வாஜ்பாய் அரசியலிலும் பிரதமராக இருந்த காலத்திலும் அனைத்துத் தரப்புகளையும் ஈர்த்த தலைவராக அவர் திகழ்ந்தார்.