Home கலை உலகம் நாடக விமர்சனம்: விஜயசிங்கத்தின் “வந்தவள் யார் அவள்?”

நாடக விமர்சனம்: விஜயசிங்கத்தின் “வந்தவள் யார் அவள்?”

2452
0
SHARE
Ad
‘வந்தவள் யார் அவள்?’ நாடகத்தில் ஒரு காட்சி

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் தலைநகர் மியூசியம் நெகாரா அரங்கத்தில் நடைபெற்று வரும் நாட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான க.விஜயசிங்கத்தின் நாடகமான ‘வந்தவள் யார் அவள்? மலேசியாவில் நாடகத் திறனையும், நாடகக் கலையைத் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகப் பார்க்கலாம்.

1962-ஆம் ஆண்டு முதல் மலேசிய நாடகத் துறையில் கால் பதித்து தனது முத்திரையைப் பதித்து வந்திருக்கும் விஜயசிங்கம் இன்னும் தனது அயராத உழைப்பையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதை இந்த நாடகத்தின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டம், ஆடம்பரமில்லாத சாதாரண அரங்குகளின் பின்னணியோடு, எளிமையான கதையையும், தனது நடிகர் குழாமையும் மட்டுமே நம்பி களத்தில் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளார் விஜயசிங்கம். அவரது முயற்சிக்கு பெருமளவில் ஒத்துழைப்பு வழங்கி துணை நின்றிருப்பது நாடகத்தில் நடித்திருக்கும் நடிக – நடிகையர்கள்.

#TamilSchoolmychoice

அனைவருமே பிசிறில்லாத – பிழையில்லாத – தமிழ் உச்சரிப்புடன் நாடக மேடையில் உலா வருகின்றனர்.

கருணாகரனாக வரும் லோகன், சரஸ்வதியாக வரும் சுலோசனா இருவரும் பிரதான பாத்திரங்களில் வெளுத்துக் கட்டியிருக்கின்றனர். லோகனின் கதாபாத்திர சித்தரிப்பும், வசன உச்சரிப்பும் இயல்பாக ஒரு குடும்பத் தலைவரை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணம் நடித்துள்ளார். சுலோசனாவும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தாலும் சில இடங்களில் அவரது குரல் அளவுக்கதிகமாக ஓங்கி ஒலிப்பது போல் தோன்றுகிறது.

‘வந்தவள் யார் அவள்?’ நாடகத்தின் நடிகர் – நடிகையர்

துணை நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பதோடு அவர்களில் பலர் புதுமுக நடிகர்கள் என்பதையும் விஜயசிங்கத்தின் நாடகப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பார்க்கும்போது, நமது நாட்டில் தமிழ் நாடகக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கடத்திச் செல்ல முற்பட்டிருக்கும் விஜயசிங்கத்தின் முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நாடகத்தில் முதல் சில காட்சிகளில் போட்ட முடிச்சை இறுதி வரை அவிழ்க்காமல் கொண்டு சென்றிருப்பது திரைக்கதையின் சிறப்பு. எனினும் முக்கால் வாசி நாடகத்தில் – இறுதிக் காட்சிகளுக்கு முன்பாகவும் ‘வந்தவள் யார் அவள்’ என்ற கேள்வியைச் சுற்றியே கதாபாத்திரங்கள் பேசுவது சற்றே போரடிக்கிறது. ஆனால் அதை மேலும் நீட்டிக்காமல் இறுதிக் காட்சியைக் கொண்டு வந்து நாடகத்தின் பரபரப்பைக் கூட்டி விடுகிறார் இயக்குநர்.

ஒவ்வொரு காட்சி முடியும்போதும் ஒரு நகைச்சுவை வசனத்தோடு முடித்திருப்பது நல்ல உத்தி.

வீட்டுக்குள் நுழையும் ரஞ்சனி யார் என்பதை இறுதிக் காட்சியில் விளக்கும்போது திரைக்கதையில் இருக்கும் ஒரு நெருடலை நாம் குறிப்பிடத்தான் வேண்டும். வீட்டுக்குள் இருப்பவர்கள் அனைவரும் வந்தவள் யார் என்பதைக் கண்டுபிடிக்கவும், அவளை வெளியேற்றவும் முயற்சிகள் எடுக்க, ரஞ்சனியோ தான் வீட்டுக்குள் வந்த நோக்கத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. குடும்பத்தை இணைக்க ரஞ்சனியும் சில முயற்சிகள் எடுப்பதுபோல் காட்சிகளை வைத்திருக்கலாம்.

மற்றபடி எந்தவிதக் குறையும் இல்லாதபடி, ஒரு தமிழ் நாடகத்தைப் படைத்திருக்கும் விஜயசிங்கத்தின் மலேசிய நாடகத் துறைக்கான பங்களிப்பை பாராட்டும் அதே வேளையில், பழைய நடிகர்களை மட்டுமே வைத்து நாடகத்தை அரங்கேற்ற முற்படாமல், இன்றைய இளைய தலைமுறையின் ஆர்வலர்களையும் இணைத்துக் கொண்டு தனது அனுபவத்தையும் பயிற்சியையும் அவர்களுக்கும் கொண்டு சென்று, எதிர்காலத்தில் தனது நாடகப் பணியை அவர்களும் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதற்காகவும் விஜயசிங்கத்திற்கு தனிப் பாராட்டுக்களை வழங்க வேண்டும்.

நாடகத்தை ஏதோ சில காரணங்களால் பார்க்க முடியாமல் தவற விட்டவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு மியூசியம் நெகாரா அரங்கத்தில் ‘வந்தவள் யார் அவள்’ நாடகம் நிறைவுக் காட்சியாக அரங்கேறுகிறது.

நுழைவு இலவசம்.

தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா கலை, கலாச்சார அறவாரியத்தின் ஆதரவில், மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் தயாரிப்பில்  அரங்கேறும் ‘வந்தவள் யார் அவள்?” நாடகத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.

உங்களின் வருகையும் ஆதரவும் உள்ளூர் நாடகக் கலையை வளர்க்கும் என்பதோடு, இந்த நாடகம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். அத்துடன் அந்நாடகத்தின் ஊடே இழையோடும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் உங்களை உணரச் செய்யும்!

-இரா.முத்தரசன்