கோலாலம்பூர் – தலைநகர் செந்துல் தமிழ்ப் பள்ளியில் உள்ள யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு – அவர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் – என்ற நோக்கத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்களை மஇகா பத்து தொகுதியின் கிளைத் தலைவர்களில் ஒருவரும், ஜாலான் ஈப்போவிலுள்ள உமாராணி உணவகத்தின் உரிமையாளருமான ஏ.கே.இராமலிங்கம் அண்மையில் இலவசமாக வழங்கினார்.
வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாக தமிழ் மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய யுபிஎஸ்ஆர் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதுவதற்கு முன்பாக மாணவர்கள் இந்தப் பாடங்களில் பயிற்சி பெறும் வண்ணம், இறுதித் தேர்வுகளுக்கு அவர்களை தயார்ப்படுத்தும் வகையிலும், மாதிரி தேர்வு கேள்வித் தாள்கள் மற்றும் அதற்கான விடைகளுடன் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் தமிழ்மொழிக்கான நூல்கள் ஏற்கனவே சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் ஆதரவுடன் வழங்கப்பட்டுவிட்டன.
செந்துல் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவருமான இராமலிங்கம் தனது அன்பளிப்பு குறித்து கூறும்போது, தான் படித்த செந்துல் தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான இந்த தேர்வு வழிகாட்டி நூல்களை இலவசமாக வழங்க முன்வந்ததாகத் தெரிவித்தார்.
இராமலிங்கம் வழங்கிய நூல்களை செந்துல் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி இலட்சுமி பள்ளி சார்பாக பெற்றுக் கொண்டார்.