இந்நிகழ்ச்சியில், டத்தோ ப.சகாதேவன், டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ குமரன் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கலை கலாச்சார அறவாரியத்தின் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சாணக்கியன் வரலாறு
இரண்டாயிரத்து முன்னூராண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் சாணக்கியன். தன் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ள வடநாட்டிற்குச் சென்றார். அங்கு தட்சசீலம் வரை சென்று கல்வியறிவை வளர்த்து தட்சசீலம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். மக்களுக்கு நல்லொழுக்கங்களைப் போதித்தார். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை விளக்கினார். அரசியல் சாசனம் எழுதினார்.
இத்தகைய பெருமைக்குரிய சாணக்கியனின் வரலாறு இயக்குநர் விஜயசிங்கத்தின் உருவாக்கத்தில், ‘சாணக்கிய சபதம்’ என்ற பெயரில் மலேசியாவில் அரங்கேறியுள்ளது பெருமைக்குரிய விசயமாகும்.
கலைஞர்கள்
சாணக்கியனாக வந்து தனது திறமையான நடிப்பால் நம்மை மெய்சிலிரிக்க வைத்தார் தினேஷ். அவரது ஆஜானுபாகுவான தோற்றமும், நடையும் உடல்மொழியும் மிகவும் கவர்ந்தது.கோபம், தந்திரம், மகிழ்ச்சி, சூழ்ச்சி, ஆச்சர்யம் என முகத்தில் அத்தனை பாவணைகளையும் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறார். அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜகாட்’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, தனநந்தனாக பிரேம் ஆனந்த்.. அப்பப்பா.. உருட்டி மிரட்டும் கண்களும், மிடுக்கான நடையும், உடையுமாக அவர் அம்மேடையில் தோன்றும் காட்சிகள் அனைத்திலும் அத்தனை பிரமிப்பு. இறுதிக் காட்சியில் தலைவிரிக்கோலமாக வந்து நின்று பெருங்கோபத்துடன் அவர் பார்க்கும் ஒரு பார்வை மிரட்டுகிறது.
அவரோடு, மகாராணியாக வரும் சக்தி தாஸ், தனது கணவரின் நிலை கண்டு குமுறி அழும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. நடிப்பு என்று சொல்வதை விட அக்காட்சியில் உண்மையாகவே அழுகிறாரோ? என்று கூடத் தோன்றியது.
ஒரு காட்சி.. துணை நடிகர்கள் இன்றி அவர் மட்டுமே தனியாக சுமார் 5 நிமிடங்களுக்குப் பேச வேண்டும். உண்மையில் அந்தக் காட்சியில் தனது தனித்துவமான நடிப்பால் அசத்திவிட்டார். வசனங்களை ஏற்ற இறக்கமாகப் பேசி, அதற்கு ஏற்ப கண்ணசைவையும், முகபாவணைகளையும் மாற்றி, தனது உடல்மொழியில் பட்டும் படாமல் நகைச்சுவையையும் சேர்த்து அருமையான நடிப்பு.
இசை, நடனம், ஒளி, ஒலி
மனீஷெர் சிங்கின் பாடல் பதிவில், சிவகுரு, ஷர்மிளா சிவகுரு, விஜயன் குமரேஸ், புவனேஸ்வரி ஆகியோரின் குரல் பாடலுக்கு இனிமை சேர்த்திருக்கிறது. அதே வேளையில், எம்.எஸ்.மணியம், அம்பிகா மணியம், வெள்ளையம்மாளின் கைவண்ணத்தில் கலைஞர்களுக்கு ஒப்பணையும், உடை வடிவமைப்பும் கச்சிதமாக அமைந்திருந்தது.
இயக்குநர் உரை
நாடகத்திற்குத் தலைமையேற்ற தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் பேசுகையில், “நமது நாட்டில் மேடை நாடகங்கள் மறைந்து போகாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.
செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்