அவர் பாகிஸ்தான் பிரதமராகப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். “நல்லுறவை வளர்க்க இந்தியா ஓரடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டடி முன்னெடுத்து வைக்கும்” என்பது அதில் ஒன்றாகும்.
இருப்பினும் இம்ரான் கான் பிரதமராவதற்கு பின்னணியில் இருந்து ஆதரவு தருவது பாகிஸ்தான் இராணுவம்தான் என இந்தியத் தரப்புகளும், ஊடகங்களும் சுட்டிக் காட்டி அவரது நடவடிக்கைகளை சந்தேகத்துடனே பார்த்து வருகின்றன.
இதற்கிடையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் தனது முன்னாள் இந்திய கிரிக்கெட் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவ்ஜோத் சிங் ஆகிய மூவரையும் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் அவர்களில் நவ்ஜோத் சிங் மட்டுமே இம்ரான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். நவ்ஜோத் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் புகழ் பெற்று பின்னர் பஞ்சாப் அரசியலிலும் கால் பதித்து தற்போது பஞ்சாப் மாநில அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆனால், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது முதல் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருந்த நவ்ஜோத் சிங், அதே வரிசையில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா-வை கட்டிப் பிடித்ததும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருப்பதும் தற்போது இந்திய ஊடகங்களில் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.