Home அரசியல் மக்கள் கூட்டணியின் கல்விக் கொள்கை மாற்றங்கள் – மாணவர்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்: சேவியர் ஜெயகுமார்

மக்கள் கூட்டணியின் கல்விக் கொள்கை மாற்றங்கள் – மாணவர்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்: சேவியர் ஜெயகுமார்

545
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderமார்ச் 29 – “நாட்டில் பெரிய நிறுவனங்களின்  சேவைக்கு ஆண்டுக்கு சுமார் 2500 கோடி வெள்ளியை (subsidy) உதவி நிதியாக  அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் ஒரு பகுதியை மனித மூலதனத்தை மேம்படுத்த, சுமார்  400 கோடிக்கும் குறைவான ஒரு தொகையை உயர் கல்விக்கு வழங்க ஏன் முடியாது?” என்று கேள்வி எழுப்பியுள்ள கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவர உத்தேசித்துள்ள மக்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் தொடர்பில் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் சேவியர் ஜெயகுமார் பின்வருமாறு மேலும் குறிப்பிட்டுள்ளார்:-

“சமீபத்தில்  அறிவிக்கப்பட்ட எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியடைந்த எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்துகள். புதியதொரு சமுதாயத்தை உருவாக்க உன்னத வழிகளில் ஒன்று கல்வியாகும். திறமையான மாணவர்களே நாட்டின் கண்கள், அவர்களைக் கொண்டு ஒரு குடும்பத்தின் ஏழ்மையையும் அகற்றலாம் நாட்டின் உயர்வையும் உறுதி படுத்தலாம், ஒரு குடும்பத்தில் அறியாமையை அகற்றவும், தேசத்தில் அநீதியை விரட்டவும் கல்வியே ஞானத்தின் திறவுக்கோள்.”

#TamilSchoolmychoice

“அதனால், இன்றைய மாணவர்களின்  உயர்வை  எல்லா வழிகளிலும் உறுதி செய்ய வேண்டியது நல்ல ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அதே வேளையில் மாணவர்கள் தேர்வு செய்யும் உயர்கல்விகூடங்கள் மற்றும் படிக்கவிருக்கும் துறைகளைக் கவனமாகத்  தேர்வு செய்யக் கேட்டுக் கொள்கிறோம். அதன் அடிப்படையிலேயே உங்கள் எதிர்கால வாழ்க்கை மற்றும் தொழில்துறை அமையும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.”

நடப்பு கல்விக் கொள்கைகளில் மாற்றங்கள் தேவை

“இன்று பட்டதாரிகளுக்குத் தகுதிக் கேற்ற வேலையில்லை என்றால் அதற்கு நடப்பு கல்வி கொள்கையில் உள்ள கோளாறுகளே காரணமாகும். அதே போல் மலேசியா போன்ற ஒரு நாட்டில் நிதி பற்றாகுறையால் பட்டதாரிகளின் உருவாக்கத்தில் பின் அடைவு ஏற்படுகின்றது என்றால் அதற்கும் திறமையற்ற அரசாங்கமே காரணமாகும்.”

“ஒரு காலத்தில் மற்றவர்களுக்குக் கற்பிக்கும் சமுதாயமாக இருந்த இந்தியச் சமுதாயம் இன்று வளர்ச்சி குன்றிய சமுதாயமாக்கப் பட்டிருக்கிறது என்றால், யார் காரணம்? என்ன காரணம் என்பதற்குப்  பட்டியல் போட வேண்டியதில்லை. இன்று பதிவு முறையில் தொடங்கி அனைத்திலும் பாகுபாடு காட்டுவதால் மாணவர்கள் அவர்கள் விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.”

“சொந்த நாட்டில் நாம் நான்காம் தர பிரஜையாக ஆக்கப்பட்டது  கடந்த காலப் பாணியாக இருக்க வேண்டும் என்பதே நமது முடிவான கருத்து. இனியும்  நம் பிள்ளைகளின்  உயர் கல்விக்குக்  கண்ட இடங்களில் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்”

மக்கள் கூட்டணி கொண்டுவரப் போகும் கல்வித் துறை மாற்றங்கள்

“அதே சிந்தனையை மாணவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் மனதில் கொள்ள வேண்டும். நமது பிள்ளைகளைக் கௌரவமான பட்டதாரியாக உருவாக்க வேண்டும், அவர்களை வாழ வைக்க, எல்லோருக்கும் பல இலட்ச வெள்ளி பெறுமானமுள்ள இலவச உயர்கல்வியை வழங்க பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி தயார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இதனைக் கருத்தில் கொண்டு, சரியான முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும் அவர் குடும்பத்தினரும் சரியான முடிவை இந்தத் தேர்தலில் எடுக்கத் தவறினால் அதனால் பாதிக்கப் படுவது நாமே என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.”

பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுப்பதைப் போன்று கல்விக்கு கொடுக்கலாமே!

“நாட்டில் பெரிய நிறுவனங்களின்  சேவைக்கு ஆண்டுக்குச் சுமார் 2500 கோடி வெள்ளியை (subsidy) உதவி நிதியாக  அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் ஒரு பகுதியை மனித மூலதனத்தை மேம்படுத்த, சுமார்  400 கோடிக்கும் குறைவான ஒரு தொகையை உயர் கல்விக்கு வழங்க ஏன் முடியாது?”

“நடப்பில் இருக்கும் கல்வி கடன் உதவிகளின் படி மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு சில முக்கிய பட்டப் படிப்புக்குக் குறிப்பாக மருத்துவம் போன்ற துறைகளுக்கு  வழங்கப்படும்  நிதி போதுமானதாக இல்லை என்பது பல மாணவர்களின் புகார். பிடி.பிடிஎன் என்னும் அரசாங்க கல்வி கடனைப் பெறும்  மாணவர்கள் கூடிய பட்சமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரிங்கிட் மட்டுமே பெறுகின்றனர். ஆனால் உள்நாட்டில் ரிங்கிட் இரண்டு லட்சத்து இருபதாயிரத்துக்கு மேல் தேவைப்படுவதால் மாணவர்களும் அவர் தம் பெற்றோர்களும் பல துன்பங்களுக்கு உள்ளாகின்றனர்”

“பெரும்பாலான கல்வி கழகங்கள் மாணவர்களைச் சேர்க்கும் பொழுது அரசாங்க கடன் அல்லது உபகாரச் சம்பளத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. அந்த அடிப்படையிலேயே மாணவர்களையும் ஈர்க்கின்றன. உண்மையில் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவி  அல்லது கடன் தொகையோ மிகக் குறைவாக இருப்பதினால்  மாணவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெரிய அவதிக்கு ஆட்படுத்தப்படுகின்றனர்”

“இந்தியர்களைப் பொருத்தவரை பலர்  எந்தச் சேமிப்போ அல்லது நிலையான சொத்துகளையோ உடையவர்கள் அல்ல. அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித் தொகைகள் போதுமானதாக இல்லாத வேளையில் பல திறமையான மாணவர்களின் கல்வி தடைபடுகிறது.”

மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்

ஆகவே மாற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களாகவே நாம் இருக்க வேண்டும்.

புதியதொரு சமுதாயத்தை உருவாக்க உன்னத வழிகளில் ஒன்று உயர்க் கல்வி. நம் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் திறமையான மாணவர்களைப் பயன்படுத்தி, அறியாமையையும், ஏழ்மையையும் அகற்றவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் நமக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்கு நாமே உதவா விட்டால், வாய்பை  தவறவிட்டால், நமது பிள்ளைகளின் இலவசக் கல்வி கனவாக முடிந்து விடும்”

-இவ்வாறு டாக்டர் சேவியர் ஜெயகுமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்..