வாஷிங்டன் – சனிக்கிழமை (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) மறைந்த அமெரிக்காவின் செனட்டர் ஜோன் மெக்கெய்ன் (படம்) பல சுவாரசியமானப் பின்னணிகளைக் கொண்டவர். மூளையில் ஏற்பட்ட புற்று நோயினால் சனிக்கிழமை காலமான அவர் தனது இறுதிச் சடங்குக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரக் கூடாது என்றும் தனக்கு நடத்தப்படும் இரங்கல் கூட்டத்தில் அவர் அஞ்சலி உரை எதனையும் நிகழ்த்தக் கூடாது என எழுதிவைத்துவிட்டு மறைந்திருக்கிறார்.
இத்தனைக்கும் ஜோன் மெக்கெய்ன், டிரம்ப் சார்ந்துள்ள அதே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவராவார். இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கா முழுவதும் பேசப்படும், விவாதிக்கப்படும் விவகாரமாக ஜோன் மெக்கெய்னின் இறுதி ஆசை மாறியுள்ளது.
மேலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அல்லது ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய இருவரும் தனக்கான இறுதி அஞ்சலி உரை நிகழ்த்தலாம் என்றும் எழுதி வைத்துள்ளார் ஜோன் மெக்கெய்ன். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், 2000-ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் தேர்தலில் ஜோன் மெக்கெய்னை ஜோர்ஜ் புஷ் தோற்கடித்தார்.
2008-இல் குடியரசுக் கட்சி மெக்கெய்னை அதிபர் வேட்பாளராக அங்கீகரித்தது. ஆனால், அந்த அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மெக்கெய்னைத் தோற்கடித்தார். தன்னைத் தோற்கடித்த இருவரையும் தனக்காக இறுதி இரங்கல் உரை ஆற்றக் கேட்டுக் கொண்டுள்ள மெக்கெயன் அமெரிக்க மக்களால் அதிகம் பேசப்படுகிறார்.
- அவரது தந்தை, தாத்தாக்கள் அமெரிக்க இராணுவத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள். அதைத் தொடர்ந்து மெக்கெய்னும் இராணுவத்தில் சேர்ந்து கடற்படை விமானியாகப் பணியாற்றினார்.
- வியட்னாம் போரில் ஈடுபட்ட ஜோன் மெக்கெய்ன் வியட்னாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 5 ஆண்டுகளாக பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டு, பல்வேறு துன்புறுத்தல்களை அனுவபவித்தார். ‘ரேம்போ’ என்ற சில்வர்ஸ்டெர் ஸ்டால்லோன்னின் ஆங்கிலத் திரைப்படத்தில் காண்பது போல் உண்மையிலேயே வியட்னாமியப் பணயக் கைதியாக துன்பங்களை அனுபவித்தார்.
- வியட்னாமில் அவர் அனுபவித்த போர்க்காலத் துன்புறுத்தல்களால் இறுதிவரை அவரால் தனது கரங்களைத் தலைக்குமேல் உயர்த்த முடியாமல் அவர் அவதிப்பட்டார்.
- முதலில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் செனட்டராகவும் பதவி வகித்த மெக்கெய்ன் 2000-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முற்பட்டார். ஆனால், கட்சிக்கான வேட்பாளர் தேர்வில் ஜோர்ஜ் புஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மெக்கெய்ன் தோல்வியடைந்தார்.
- பின்னர் ஜனநாயகக் கட்சியினருடனும், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஜோன் கெர்ரி போன்றவர்களுடனும் இணைந்து வியட்னாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நட்புறவு மலரப் பாடுபட்டார்.
- 2008-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் வேட்பாளராகப் போட்டியில் இறங்கினார். எனினும் இந்த முறை அவரை அதிபர் தேர்தலில் தோற்கடித்தவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா.
- அமெரிக்க அதிபராக தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார் மெக்கெய்ன். ஒபாமா கொண்டு வந்த சுகாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தபோது, அதற்கு எதிராக செனட் சபையில் வாக்களித்தார் மெக்கெய்ன்.
- டிரம்புடன் இறுதிவரை பகைமை பாராட்டிய அவர் தனது இறுதிச் சடங்குக்குக் கூட டிரம்ப் வரக் கூடாது, தனக்காக இரங்கல் உரை ஆற்றக் கூடாது என்று அவர் தனது இறுதி ஆசையாகக் கூறிச் சென்றதுதான் டிரம்புடனான அவரது போராட்டத்தின் உச்சகட்டம்.