Home நாடு “இந்து அறப்பணி வாரியம் : மக்கள் மன்றத்தில் விவாதிக்க என்ன இருக்கிறது?” – குமரனுக்கு ...

“இந்து அறப்பணி வாரியம் : மக்கள் மன்றத்தில் விவாதிக்க என்ன இருக்கிறது?” – குமரனுக்கு பினாங்கு கிருஷ்ணசாமி பதில்!

1185
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பரிந்துரைத்துள்ள தேசிய நிலையிலான இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் முன்னர் அதுகுறித்த விரிவான விவாதங்கள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக “காலங் காலமாக செயல்படும் இந்து அறப்பணி வாரியத்தின் செயல்பாடுகள்  ஆலயங்களின் பாதுகாப்புக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதன் வாயிலாக இன்று ஆலயப் பிரச்சனைகளை மாநில அரசாங்கங்களின் வழி சுமூகமாக தீர்க்க வழி வகுக்க முடியும்.பினாங்கில் இது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அறப்பணி வாரியம் அமைப்பது இந்திய சமூகத்திற்கு பெருமளவில் நன்மையைக் கொண்டுவரும்” என பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையர்களில் ஒருவரான கு.கிருஷ்ணசாமி செல்லியல் ஊடகத்திற்கு அனுப்பிய அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

“ம.இ.கா தங்கள் காலத்தில் செய்ய முடியாததை நம்பிக்கைக் கூட்டணி செய்ய முற்படும்போது டான்ஸ்ரீ குமரன் (படம்) போன்றோர் முட்டுக் கட்டையாக இருப்பது நல்லதல்ல” என்றும் கேட்டுக் கொண்ட கிருஷ்ணசாமி, “60 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அப்பொழுது நீங்கள் செய்யத் தவறியதை இன்று தேர்தல் வாக்குறுதி மூலம் அதனைச் செயல்படுத்த முற்படும்போது எதிர்மறையான ஆலோசனைகள் வேண்டாம். செய்யாமல் விட்ட நீங்களே இவ்வளவு சிந்திக்கும்போது கடந்த பத்து ஆண்டுகளாக இந்து அறப்பணி வாரியத்தை தூக்கி நிறுத்திய பேராசிரியர் இராமசாமி இதனை சிந்திக்காமல் இருப்பாரா என்ன? பக்காத்தான் தலைவர்கள் கலந்தாலோசித்துதான் இதனை செயல்படுத்த முற்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஆலயங்களில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதும், அதனால் அதன் பதிவு இரத்தாவதும் பரவலாக  நடக்கிறது. பதிவிலாகாவே ஆலயங்களை அறப்பணி வாரியம் ஏற்று நடத்த பரிந்துரைக்கிறது. நிலப்பிரச்சனைகள், நில ஒதுக்கீடுகள் அனைத்தும் அறப்பணி வாரியம் மூலமாக ஆலயங்களுக்குப் பெற்றுத்தருவது என்பது சிறந்த அரசு அமைப்பாகும்.நல்ல முறையில் செயல்படும் ஆலயங்களை அறப்பணி வாரியம் ஒருபோதும் எடுக்காது. அப்படி எடுத்தாலும் பராமரிக்க பணம் வேண்டும்.எனவே பத்தாண்டுகள் பினாங்கு மாநிலத்திற்கு இதில் அனுபவம் உண்டு . எனவே டான்ஸ்ரீ குமரன் போன்றோர் கருத்து சொல்லி மக்களை குழப்பாமல் இருப்பது நல்லது” என்றும் கு.கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்.