Home கலை உலகம் திரைவிமர்சனம் : “இமைக்கா நொடிகள்” – நயன், காஷ்யப் இணைந்த மர்ம மிரட்டல்!

திரைவிமர்சனம் : “இமைக்கா நொடிகள்” – நயன், காஷ்யப் இணைந்த மர்ம மிரட்டல்!

1726
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘கோலமாவு’ கோகிலாவாக அப்பாவித்தனமும், துணிச்சலும் கொண்ட சாதாரணப் பெண்ணாகக் கலக்கிய நயன்தாரா, அடுத்த சில வாரங்களிலேயே அதிரடி காவல் துறை அதிகாரியாக உருவெடுத்திருக்கும் படம் “இமைக்கா நொடிகள்”. சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அதிகாரி அஞ்சலியாக – சில கொலைகளைத் துப்பு துலக்குபவராக – அசத்தல் நடிப்பை வழங்கியிருக்கிறார் நயன்தாரா.

கோலமாவுக்கு அடுத்த படத்திலும், காதல், ஜோடி, பாடல் என வழக்கமான கதாநாயகியாக வலம் வராமல் கதையோடு இணைந்த நாயகியாக தன்னை நிலைநிறுத்துகிறார் நயன்.

படத்தின் இலக்கியத் தன்மையான தலைப்பின் பொருளைப் போலவே கண்களை இமைக்காமல் பார்க்கும் வண்ணம் மர்மம், திகில், பரபரப்பு, எதிர்பாராத திருப்பங்கள் என நகர்கிறது படம்.

#TamilSchoolmychoice

ஆனால், கண்களை இமைக்காமல் நம்மைப் பார்க்க வைப்பவர் நயன்தாரா அல்ல! படம் முழுக்க வில்லனாக மிரட்டும் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் என்பதுதான் ஆச்சரியம். சொந்தக் குரலா என்பது தெரியவில்லை. ஆனால், தனது உடல் மொழிகளாலும், அடுத்தடுத்து கொலை செய்யும் வெறித் தனத்தைக் காட்டுவதிலும் படத்தைத் தூக்கி நிறுத்துபவர் அவர்தான்.

பெங்களூருவில் சில புள்ளிகள் கடத்தப்பட்டு, அவர்களின் குடும்பத்தினர் பிணைப் பணம் கேட்டு மிரட்டப்படுகின்றனர். பணம் கொடுக்கப்பட்டாலும், கடத்தப்பட்டவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். அந்தக் கொலைகளை செய்தது நான்தான் என முன்வருகிறான் ருத்ரா என்ற கொலைகாரன். அவர்தான் அனுராக் காஷ்யப். ஆனால், இதே ருத்ரா சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்று கொலைகளைச் செய்தவன் – அவனைக் கண்டுபிடித்துச் சுட்டுக் கொன்றதே இதே நயன்தாராதான் – எனத் தொடங்கும் படத்தில் நயனின் தம்பி அதர்வாவின் காதல் இன்னொரு கிளைக் கதை.

இமைக்கா நொடிகள் – அதர்வா, ராசி கண்ணா

படத்தின் ஆரம்பத்திலேயே தனது குரலை மட்டும் அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி, முக்கால் வாசி படம் முடிந்தும் தலை காட்டாமல் இருப்பது இரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால், இறுதியில் தான் வரும் சில காட்சிகளிலேயே தனது சுவாரசியமான, கலகலப்பான நடிப்பால் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.

படத்தின் பல திருப்பங்கள், மர்மங்கள் எதிர்பார்க்காத வகையில் இடம் பெற்றாலும், இடைவேளையின்போது, காட்டப்படும் திருப்பத்தை நம்மால் ஏற்கனவே ஊகிக்க முடிகிறது. அதேபோல் விஜய் சேதுபதிக்கு என்ன நடக்கும் என்பதையும் நம்மால் முன்கூட்டியே ஊகிக்க முடிவது திரைக்கதையின் மிகப்பெரிய பின்னடைவு.

நயன்தாராவின் மகளாக வரும் சுட்டிப் பெண் தனது வெடுக்கான பேச்சுகளால் கவர்கிறார். அதே போல் அதர்வாவின் காதலி கிருத்திகாவாக வரும் ராசி கண்ணா என்ற புதுநடிகையும் தனது அழகாலும், முக பாவனைகளாலும் கவர்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தமிழில் ஒரு சுற்று வருவார்.

இசை, ஹிப்ஆப் தமிழா ஆதி. பாடல்கள் அவ்வளவாக இரசிக்க முடியவில்லை என்றாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த ஆர்.டி.இராஜசேகரின் ஒளிப்பதிவு, பெங்களூரு தெருக்களைச் சுற்றிக் காட்டுவதோடு, வீடுகளிலும், மருத்துவமனை, காவல் நிலையங்களிலும், உயரமானக் கட்டடங்களிலும் உள்ளே புகுந்து திரைக்கதையோடு பயணம் செய்து, படத்தின் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

“டிமாண்டி காலனி” படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். மர்மப் படத்துக்குப் பொருத்தமாக பிரபல மர்மக் கதை மன்னன் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனங்கள் எழுதியிருக்கிறார். சில இடங்களில் வசனங்கள் கவர்கின்றன. குறிப்பாக காட்டில் கழுதைப் புலி குறித்த விமர்சனமும், அதைப் பொருத்தமாக திரைக்கதையோடு இணைத்திருப்பதும் இரசிக்க வைக்கிறது.

ஆங்காங்கே கத்தரிக்கோல் போட்டு படத்தின் நீளத்தை ஒரு பதினைந்து நிமிடம் குறைத்திருந்தால், படத்தின் விறுவிறுப்பு இன்னும் பன்மடங்கு கூடியிருக்கும். இரண்டாவது பாதியில் அந்தத் தொய்வு நன்றாகத் தெரிகிறது.

நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அதர்வா என்ற நட்சத்திரப் பட்டாளம் ஒருபுறம் – திகில், மர்மம் என நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கும் திரைக்கதை இன்னொரு புறம் – ‘இமைக்கா நொடிகள்’ தாராளமாகப் பார்க்கலாம்!

-இரா.முத்தரசன்