கோலாலம்பூர் – துணையமைச்சர் ஒருவரின் செயலாளரின் அருவருக்கத்தக்க, தவறான செயல் அவரது பதவிக்கே உலை வைத்திருக்கிறது.
உள்துறை துணையமைச்சர் டத்தோ அசிஸ் ஜம்மான் (படம்) தனது கண்களைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவரைப் பெண்மணி ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் உடனிருந்த துணையமைச்சரின் செயலாளர் அந்தப் பெண்ணின் ஆடைகளை ஆபாசமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இந்தக் காணொளி மறைக்காணி (சிசிடிவி கேமரா) மூலமாக படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியாகப் பகிரப்பட்டிருக்கிறது.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய பின்னர் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து அந்த செயலாளரை துணையமைச்சர் அசிஸ் ஜம்மான் உடனடியாக அவரது பதவியிலிருந்து நீக்கி விட்டார்.
துணையமைச்சர் என்ற முறையில் தனது தோற்றம் பாதிக்கப்பட்டிருப்பதால், தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்யவும் அசிஸ் பரிசீலித்து வருகிறார்.
“எனக்குத் தெரியாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட எனது செயலாளரின் செயலை நான் கடுமையாகக் கருதுகிறேன். இது அருவருக்கத்தக்க, ஆபாசமான, ஏற்றுக் கொள்ளமுடியாத செயல். எனது செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன்” என்றும் அசிஸ், தெரிவித்திருக்கிறார்.
தனது செயாலளரின் தகாத செயலுக்காக அசிஸ் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த செயலில் தனது மற்ற ஊழியர்கள் யாருக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
பெண்மணி ஒருவர் துணையமைச்சருக்குக் கண்பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, துணையமைச்சரின் அந்த செயலாளர் அந்தப் பெண்மணியின் உள்ளாடைகளைப் படம் பிடிக்க முயற்சி செய்யும் 1 நிமிடக் காணொளி சமூக ஊடங்களில் நேற்று பரவியது.