கோலாலம்பூர்: கடந்த மே 23-ஆம் தேதி அப்துல் ஹாமிட் பாடோர் காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 252 காவல் துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று துணை உள்துறை அமைச்சர் அஜிஸ் ஜம்மான் தெரிவித்தார்.
“காவ்ல் துறை இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.”
“அதன்படி, எந்தவொரு அதிகாரியும் அல்லது உறுப்பினரும் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளியாகவோ கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளில் பொது சேவை விதிமுறைகள் 1993-இன் (நடத்தை மற்றும் ஒழுக்கம்) விதிகளுக்கு உட்பட்ட எச்சரிக்கை, பதவி இறக்குதல், பதவி நீக்கம் செய்யப்படுதல் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.
போதைப்பொருள் உள்ளிட்ட தவறான செயல்களுடன் நீண்டகாலமாக தொடர்புபடுத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு அப்துல் ஹாமிட் காவல் துறையினருக்கு வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய காலங்களில், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளின் கைது நடவடிக்கை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அவர்களில், இந்த மாதம் கோலாலம்பூரில் ஓர் இரவு விடுதியில் 19 காவல் துறையினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கினை எதிர்நோக்கி வருகின்றனர்.