கோலாலம்பூர் – உள்துறை துணையமைச்சர் டத்தோ அசிஸ் ஜம்மான் தனது கண்களைப் பரிசோதிக்க கண்ணாடிக் கடை ஒன்றுக்குச் சென்றபோது, அவரைப் பெண்மணி ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆடைகளை ஆபாசமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்த துணையமைச்சரின் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அந்தச் செயலாளர் அந்தப் பெண்ணின் உள்ளாடைகளை படம் பிடிக்க முயற்சி செய்வதைக் காட்டும் காணொளி மறைக்காணி (சிசிடிவி கேமரா) மூலமாக படம் பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியாகப் பகிரப்பட்டிருக்கிறது.
கோலாலம்பூரில் ஸ்ரீ ஹர்த்தாமாஸ் வட்டாரத்தில் உள்ள சொலாரிஸ் டுத்தாமாஸ் வணிக வளாகத்தில் 47 வயதான அந்தச் செயலாளர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் கைது செய்யப்பட்டதாக செந்தூல் காவல் நிலைய தலைமை அதிகாரி ஆர்.முனுசாமி தெரிவித்திருக்கிறார்.
அந்தச் செயலாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் முனுசாமி மேலும் கூறினார்.
செயலாளரின் செயல் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய பின்னர் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து அந்த செயலாளரை துணையமைச்சர் அசிஸ் ஜம்மான் உடனடியாக அவரது பதவியிலிருந்து நீக்கி விட்டார்.
“எனக்குத் தெரியாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட எனது செயலாளரின் செயலை நான் கடுமையாகக் கருதுகிறேன். இது அருவருக்கத்தக்க, ஆபாசமான, ஏற்றுக் கொள்ளமுடியாத செயல். எனது செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன்” என்றும் அசிஸ், தெரிவித்திருக்கிறார்.
தனது செயாலளரின் தகாத செயலுக்காக அசிஸ் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த செயலில் தனது மற்ற ஊழியர்கள் யாருக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.