கோலாலம்பூர் – “பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது அம்மாநிலத்திற்குக் கிடைத்த அதிர்ஷ்டமும் பெருமையும் ஆகும்” என பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (படம்) விடுத்திருக்கும் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
“பக்காத்தான் ஹராப்பானின் 113 தொகுதிகளில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளைத் தன் வசம் வைத்துள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர், இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு மூலக் காரணமானவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நீதிக்காகத் தன்னையே அர்ப்பணித்து, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போராடியவர், அப்படியிருக்க அவர் போட்டியிடுவதை எவர் குறை சொல்லமுடியும்?” என்றும் சேவியர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
அன்வார் இப்ராகிம் தேர்தலில் போட்டியிடப் பல தொகுதிகள் வழங்கப் பட்டாலும் அவர் போர்ட்டிக்சனில் போட்டியிட அத்தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல சிறப்பு காரணங்கள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்ட சேவியர், அது ஒரு பல இனத் தொகுதி என்பதுடன் நெகிரி மாநிலத்தின் வளம் சிறப்பாகக் கையாளப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
“மிக வேகமாக வளர்ச்சியடையும் சிலாங்கூர் மாநிலத்துக்கு அருகில் இருக்கும் நெகிரி மாநிலம் மற்றும் போர்ட்டிக்சன் நகரின் வளர்ச்சி இதுவரை போற்றத்தக்கதாக அமையவில்லை. ஆனால், ஆற்றல் நிறைந்த ஒரு தலைவரின் வழிகாட்டலில், ஒரு நாட்டின் பிரதமரின் தொகுதி என்ற ரீதியில் போர்ட்டிக்சனும் நெகிரி மாநில மக்களும் பயனடைய, வளர்ச்சிக்கான நிறைய வாய்ப்புண்டு என்பதால் அன்வார் இப்ராகிமைத் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்றும் சேவியர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
“இராணுவ வீரர்கள் எப்பொழுதும் தியாக சின்னங்களே! அதனை நிருபிக்கும் வண்ணம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சித் தலைவருக்காக விட்டுக் கொடுக்க முன்வந்துள்ள நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா ஒரு உண்மையான நேர்மையான கடற்படை அதிகாரி என்பதனை நாட்டுக்கு நிரூபித்து விட்டார். தனக்கு வாக்களித்த மக்கள் நல்ல பயனை அடைய வேண்டும் என்பதற்காக, எதிர்காலப் பிரதமரையே தனது தொகுதிக்கு, வேட்பாளராக்கியப் பெருமை டேனியஸ் பாலகோபால் அப்துல்லா அவர்களையே சாரும்” என்றும் சேவியர் டேன்யல் பாலகோபாலைப் புகழ்ந்துரைத்தார்.
பொதுத்தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இடைத்தேர்தல் என்ற குறைபாட்டினைத் தவிர்க்க அனைவருக்கும் ஆசைதான், ஆனால் சிலாங்கூரில் ஏற்பட்ட திடீர் மரணங்களால் இடைத் தேர்தலைத் தவிர்க்க முடியவில்லை. அதனைச் சரி செய்யும் ஒரு வழி முறையாகச் சிலாங்கூர் மக்களுக்கு மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தாமலிருப்பதை உறுதிப்படுத்தவே அன்வார் இப்ராகிம் நெகிரி மாநிலத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் சேவியர் சுட்டிக் காட்டினார்.
“நாடும், மக்களும் அறியும் வண்ணம், அன்வார் இப்ராகிம் இடைத்தேர்தல் வழி மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரப்படுவார் என்று பக்காத்தான் ஹராப்பான் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்ததையும் வாக்காளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆக, இந்த இடைத்தேர்தலை மக்கள் ஒரு இடராக எண்ணாமல், மாற்றத்தின் ஒரு அங்கமாக, நெகிரி மாநில முன்னேற்றத்திற்கான ஒரு மார்க்கமாக ஏற்றுத் தங்களின் ஆதரவையும்,ஒத்துழைப்பையும் அன்வார் இப்ராகிமுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் வழங்க வேண்டும்” என்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.