Home நாடு அன்வாருக்கு ஆதரவு – மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

அன்வாருக்கு ஆதரவு – மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

919
0
SHARE
Ad

கோலாலம்பூர் – போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முடிவு குறித்து தான் அங்கீகரிப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார்.

“போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவது அன்வாரின் தனி உரிமை. அதில் நான் தலையிட முடியாது. இது குறித்து கருத்துரைக்கவும் முடியாது. இருப்பினும் அவரது வேட்பு மனுவை நான் அங்கீகரிப்பேன்” என்றும் மகாதீர் கூறினார்.

“ஹாங்காங்கில் இருந்து அன்வார் என்னைத் தொலைபேசியில் அழைத்து போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடும் முடிவு குறித்து தெரிவித்தார். பொதுவாக இடைத் தேர்தல் எதற்கும் நான் பிரச்சாரத்துக்கு செல்வதில்லை என்பதை அவரிடம் நான் கூறினேன்” என இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

போர்ட்டிக்சன் தொகுதியில் வென்றால் அன்வார் அரசாங்கப் பதவியில் நியமிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, “பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் அண்மையில் விடுத்த அறிக்கையின்படி அன்வார் வெற்றி பெற்றாலும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் நாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என மகாதீர் சுட்டிக் காட்டினார்.

“எனக்குப் பின்னர் அன்வார்தான் அடுத்த பிரதமர் என்பது ஏற்கனவே முடிவான ஒன்று. அதில் எந்தவித மாற்றமுமில்லை. இருப்பினும் அதற்கான கால நிர்ணயத்தை இன்னும் முடிவு செய்யவில்லை. எனக்கு வயதாகி விட்டது என்பதையும் நான் உணர்கிறேன். இன்னும் 2 ஆண்டுகளில் எனக்கு 95 வயதாகிவிடும்” என்றும் மகாதீர் மேலும் கூறினார்.