
கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கு விவகாரம் விரிவடைந்து கொண்டே போகும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ரஹா முகமட் நோவா வீட்டிலும் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அவரது வீடு ஜாலான் ஈட்டன் (Jalan Eaton) என்ற இடத்தில் அமைந்துள்ளது.
14 பேர் கொண்ட காவல் துறை குழுவினர் நஜிப் தாயார் வீட்டின் மேற்கூரை வரை உடைத்துப் பார்த்து, அங்கு ரொக்கப் பணம் ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையிட்டதாகவும், எனினும், அவர்களுக்கு அத்தகைய பணம், பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.
1எம்டிபி பணத்தின் ஒரு பகுதியை நஜிப் தனது தாயார் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கையை காவல் துறையினரின் வணிகக் குற்றங்களுக்கான பிரிவினர் மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையை உறுதிப்படுத்தியிருக்கும் நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா “ஒரு பரிதாபத்துக்குரிய பெண்மணியை அவர்கள் வேண்டுமென்றே பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவரது வீட்டில் எதையும் கண்டுபிடிக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.