கோலாலம்பூர் – எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் தங்களின் சுய அரசியல் இலாபத்துக்காக உணர்ச்சிகரமான இன, மத விவகாரங்களை கையிலெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காரணம் அதனால், தேசிய மேம்பாட்டுக்கு அத்தகைய போக்கு உதவாது என்றும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இன நல்லிணக்கத்தைப் பேணி வந்துள்ள நமது நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சரான வேதமூர்த்தி மேலும் கேட்டுக் கொண்டார்.
“நாட்டின் பாதுகாப்பும், நிலைத்தன்மையும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அதிக அரசியல் ஆசைகள் கொண்ட ஒருசில அரசியல்வாதிகள் தங்களின் சுய அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக இனத்தையும், மதத்தையும் பயன்படுத்துவதையும் அதன் மூலம் நமது நாட்டின் நல்ல சூழல் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்றும் வேதமூர்த்தி வலியுறுத்தினார்.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள சுத்த சமாஜ சங்கம் நேற்று சனிக்கிழமை நடத்திய அனைத்துலக சமாதான தினம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வேதமூர்த்தி மேற்கண்டவாறு கூறினார்.
செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்துலக சமாதான தினமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியை ‘பார்ட்னர்ஸ் ஃபோர் பீஸ் மலேசியா’ (Partners for Peace Malaysia) என்ற அமைப்பு, பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமைத் துறை மற்றும் ஒருங்கிணைப்பு இலாகாவோடு இணைந்து கொண்டாடியது.
சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ஆம் தேதியை அனைத்துலக சமாதான தினமாகக் கொண்டாட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் மனு ஒன்றை இந்த நிகழ்ச்சியின்போது ஏற்பாட்டாளர்கள் சார்பில் ‘பார்ட்னர்ஸ் ஃபோர் பீஸ் மலேசியா’ தலைவர் ஜோசப் லாவ் வேதமூர்த்தியிடம் வழங்கினர்.
தாமான் தித்திவாங்சா பூங்கா, இனி தித்திவாங்சா அமைதிப் பூங்காவாக அரசாங்கப் பதிவேட்டில் (gazetted) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் சமாதான தினக் கொண்டாட்டத்தின் தொடர்பில் தேசிய சமாதான விருது ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் மேலும் வலியுறுத்தப்பட்டது.