Home உலகம் ஐ.நா. பொதுப் பேரவையில் மகாதீர் உரை

ஐ.நா. பொதுப் பேரவையில் மகாதீர் உரை

809
0
SHARE
Ad

நியூயார்க் – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் பொதுப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 11.30 மணியளவில் பிரதமர் துன் மகாதீர் உரையாற்றினார்.

மறைந்த ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலாளர் கோபி அன்னான் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய மகாதீர், தொடர்ந்து பல்வேறு உலக சம்பவங்களை, குறிப்பாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தும் அத்துமீறல்களையும், வரம்பு மீறிய தாக்குதல்களையும் சாடினார். இதற்கு ஒரே தீர்வு பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகி செயல்பட அனுமதியளிப்பதுதான் என்றும் அவர் மேலும் கூறினார்.

புதிய ஆட்சி மாற்றத்தின் மூலம் மலேசியர்கள் வழங்கியுள்ள அதிகாரத்தின் வாயிலாக ஐ.நாவில் உரையாற்ற வந்திருப்பதாகக் கூறிய மகாதீர், மலேசியாவின் வளத்திலும், முன்னேற்றத்திலும் ஒவ்வொரு மலேசியனுக்கும் பங்கு இருப்பதைத் தான் உறுதி செய்ய கடப்பாடு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“61 ஆண்டுகால ஆட்சியை கடந்த 14-வது பொதுத் தேர்தலில் மக்கள் அகற்றினார்கள். கடந்த அரசாங்கம், ஒருவருக்கொருவர் துவேஷம் கொண்ட அரசியலை நடத்தியதும், ஒருசார்புத் தன்மையோடு இன, மத பிரிவினைகளை உருவாக்கும் முறையில் ஆட்சி நடத்தியதும், நாடெங்கிலும் பரவிக் கிடந்த ஊழலும்தான் அதற்கான காரணங்கள். ஆட்சி மாற்றம் ஜனநாயகப்படியும், வன்முறை இன்றியும், எந்தவித உயிரிழப்பும் இல்லாமலும் நடந்தேறியது” என்றும் தனதுரையில் மகாதீர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புதிய மலேசியாவை உருவாக்கியிருக்கும் மலேசியர்களின் சார்பாக அதே போன்ற எதிர்பார்ப்பை அனைத்துலக அளவில் எதிர்பார்த்து தான் வந்திருப்பதாகவும் மகாதீர் தனதுரையில் தெரிவித்திருக்கிறார்.

துன் மகாதீர் ஐக்கிய நாடுகளின் மன்றப் பொதுப் பேரவையில் ஆற்றிய ஆங்கில உரையின் முழுமையான வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம்:

Full text of Tun Mahathir’s speech at the UN 73-rd Assembly