இலண்டன் – பிரிட்டனுக்கான வருகையை மேற்கொண்டு தற்போது இலண்டனில் இருக்கும் பிரதமர் துன் மகாதீர் “இனி பணி ஓய்வு பெறும் வயது 95” என பிரிட்டனில் வசிக்கும் மலேசியர்களிடையே உரையாற்றும் போது கிண்டலாகக் கூறினார்.
93-வது வயதில் பதவியேற்ற மகாதீர் “எனது ஓய்வு பெறும் வயதான 95 வரை நான் தாக்குப் பிடிப்பேன் என நம்புகிறேன்” என்றும் கூறினார். ஞாயிற்றுக்கிழமையன்று (30 செப்டம்பர்) சுமார் 500 மலேசியர்களுடனான தேநீர் விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
பதவி ஓய்வுக்கு முன்பாக மலேசியாவைப் பீடித்துள்ள பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும், இருப்பினும் நான் இன்னும் அதிக நாள் பதவியில் இருக்க மாட்டேன் என்றும் மகாதீர் கூறினார்.
அவரது முடிவுக்கு மனைவி சித்தி ஹஸ்மா அலி ஒப்புக் கொண்டு விட்டாரா என்று கேட்டதற்கு “அவருக்கு வேறு வழியில்லை. ஆனால் அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் எங்கு சென்றாலும் என்னுடன் இணைந்து வருகிறார்” என்றார் மகாதீர்.
சித்தி ஹஸ்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தலைமைத்துவ முன்னுதாரணமாக தானும் கடுமையாக பணியாற்ற வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட மகாதீர் “நோய்கள்தான் உங்களைக் கொல்லும். அதிக வேலைப் பளு உங்களைக் கொல்லாது. நீங்கள் உடல் தசைகளுக்கு மட்டும் பயிற்சி கொடுக்காமல் மூளைக்கும் பயிற்சி கொடுத்து வர வேண்டும்” என்றும் தனதுரையில் கூறினார்.
அன்வார் வெற்றி பெறுவார் – மகாதீர் கூறுகிறார்
இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது “அன்வார் போர்ட்டிக்சனில் வெற்றி பெறுவார். நிறைய வேட்பாளர்கள் நிற்பதால் வாக்குகள் சிதறும்” என்றும் மகாதீர் கூறினார்.
இதன் மூலம் அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் மகாதீர் கூறினார்.