Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய வட்டார மொழிகளின் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

இந்திய வட்டார மொழிகளின் இணையப் பயன்பாடு அதிகரிப்பு

1107
0
SHARE
Ad

புதுடில்லி – கணினியின் இணையத் தளங்களில் தேடுபொறியாக (Search Engine) முன்னணி வகிக்கும் கூகுள், இந்தியாவின் வட்டார மொழிகளின் பயன்பாடு இணையத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்தத் துறையில் மேலும் கூடுதல் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் இணையப் பயனர்கள் எண்ணிக்கை தற்போது 450 மில்லியனாக இருக்கிறது. இவர்களில் 390 மில்லியன் பயனர்கள் தினமும் தீவிரமாக இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஆகும்.

கூகுள் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, இந்தப் பெரிய எண்ணிக்கைக்கானக் காரணம், இந்தியாவின் வட்டார மொழிகளில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அதிலும் குறிப்பாக காணொளி (வீடியோ) மூலம் பார்க்கும் பழக்கம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் ஆகும் எனத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

400 மில்லியன் பயனர்களில் சுமார் 250 மில்லியன் பயனர்கள் தங்களின் வட்டார மொழியின் வாயிலாகவே இணையத்தை வலம் வருகிறார்கள். கூகுள் நிறுவனத்தின் தென்கிழக்காசியா மற்றும் இந்தியாவுக்கான உதவித் தலைவர் இராஜன் ஆனந்தன் (படம்) “இந்தியாவிலிருந்து வட்டார மொழியின் வழி இணையத்தை வலம் வருபவர்கள் ஆங்கிலத்தின் மூலம் வலம் வருபவர்களைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள்” எனக் கூறுகிறார்.

கூகுளின் கணிப்புகளின்படி தற்போது இந்தியாவில் 250 மில்லியனாக இருக்கும் வட்டார மொழிகளின் பயனர்களின் எண்ணிக்கை 2021-இல் 500 மில்லியனாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதில் ஆச்சரியப்படத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால் பயனர்களின் வளர்ச்சி இனியும் நகர்ப்புறங்களில் இருந்து வரவில்லை. மாறாக, கிராமப் புறங்களிலும் இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகர்களில் இருந்தும்தான் பெருமளவில் பயனர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல! கிராமப்புற பெண்களிடையே இணையப் பயன்பாடு பெருமளவில் அதிகரித்து வருகிறது. எங்களின் கணிப்புப் படி 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 45 விழுக்காடு பயனர்கள் பெண்களாக இருப்பர்” என்கிறார் இராஜன் ஆனந்தன்.