கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியில் கட்டம் கட்டமாக வாக்களிப்புகள் நடந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி ரபிசி ரம்லி 43 வாக்குகளில் அஸ்மின் அலியை விட முன்னணி வகிக்கிறார்.
கூட்டரசுப் பிரதேச வட்டாரத்துக்கான தேர்தலில் ரபிசி பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லாபுவான் ஆகிய மூன்று கூட்டரசுப் பிரதேச வட்டாரங்களில் நடைபெற்ற தேர்தலில் ரபிசி 2,929 வாக்குகள் பெற்றார். அஸ்மின் 2,794 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேச வாக்குகளில் 135 வாக்குகள் பெரும்பான்மை பெற்று ரபிசி முன்னணி வகிக்கிறார்.
கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களின் பெரும்பான்மை வாக்குகளையும் ரபிசி ரம்லியே பெற்றிருக்கிறார். பினாங்கு, ஜோகூர் மாநிலங்களின் பெரும்பான்மை வாக்குகளை அஸ்மின் கைப்பற்றினார்.
இன்றைய வாக்களிப்புகளுக்கு முன்பாக அஸ்மின் 92 வாக்குகளில் ரபிசியைப் பின்னுக்குத் தள்ளி முன்னணி வகித்தார்.
இதுவரையில் ரபிசி 19,155 வாக்குகள் பெற்றிருக்கும் நிலையில், அஸ்மின் 19,112 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.
மிகப் பெரிய மாநிலமான சிலாங்கூர் மாநிலத்தின் வாக்களிப்புதான் இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் என்ற கருத்துக் கணிப்பும் பிகேஆர் வட்டாரங்களில் நிலவுகிறது. காரணம், மொத்த வாக்குகளில் அதிகமான விழுக்காடு வாக்குகளை சிலாங்கூர் கொண்டிருக்கிறது. அஸ்மின், ரபிசி ஆகிய இருவருமே சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த மாநிலத்தின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் இருவருக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.