Home நாடு போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?

1198
0
SHARE
Ad
காற்பந்து போட்டி விளையாட்டை பந்தை உதைத்துத் தொடக்கி வைக்கிறார் அன்வார்

போர்ட்டிக்சன் – (நாளை சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக, இந்த இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் களமிறங்கும் சுயேச்சை வேட்பாளர்களில் தனித்துத் தெரிபவர், வலுவான போட்டி கொடுக்கும் வேட்பாளராகப் பார்க்கப்படுபவர் டான்ஸ்ரீ  முகமட் இசா சமாட்.

சுயேச்சை வேட்பாளர்களிலேயே இவரது பதாகைகள்தான் போர்ட்டிக்சனில் அதிக இடங்களில் காணப்படுகின்றன.

#TamilSchoolmychoice

அன்வாருக்கு எதிராக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது தேசிய முன்னணியும், அம்னோவும் செய்த மாபெரும் தவறு என்ற வாதம் போர்ட்டிக்சன் பொதுமக்களிடையே எங்கும் எதிரொலிக்கிறது. சில அரசியல் பார்வையாளர்களும் ஊடகங்களில் இவ்வாறே எழுதியிருக்கிறார்கள்.

போர்ட்டிக்சனில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் டான்ஸ்ரீ முகமட் இசா சமாட்டை (படம்) தேசிய முன்னணி வேட்பாளராக நிறுத்தி அம்னோ களத்தில் குதித்திருக்க வேண்டும் எனப் பலரும் கூறுகிறார்கள். அப்படிச் செய்திருந்தால் பாஸ் கட்சியும் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கும். அன்வாருக்கு வலுவான போட்டி உருவாக்கப்பட்டு போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பரபரப்பாகியிருக்கும்.

வெற்றியோ, தோல்வியோ, தேசிய முன்னணியின் அனைத்துக் கட்சிகளும் அன்வார் போன்ற ஒரு மிகப் பிரம்மாண்டமான பிம்பம் கொண்ட கொண்ட அரசியல் தலைவருக்கு எதிராக மோதி, தங்களின் தேர்தல் பிரச்சார இயந்திரங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்க முடியும். கட்சியில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு ஒரு பயிற்சிக் களமாக போர்ட்டிக்சன் இடைத் தேர்தலை உருவாக்கியிருக்க முடியும்.

அந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் அம்னோவின் தலைவர் சாஹிட் ஹமிடி என்கிறார்கள் பலரும்!

அன்வாருக்கு அடுத்த நிலையில் யார்?

அனல் தெறிக்கும் பிரச்சாரங்களுக்கு இடையில் பேத்தியுடன் காலாற நடைப் பயிற்சி மேற்கொள்ளும் அன்வார்…

இப்போது இருக்கும் கள நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது அன்வார் வெற்றி பெறுவது உறுதி என்றாலும், அவருக்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்று வரப்போவது யார், இசா சமாட்டா? பாஸ் கட்சியா? என்ற விவாதம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அன்வாருக்கு அடுத்த நிலையில் சுமார் 5 ஆயிரம் வாக்குகள்  பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் இசா சமாட் என்னும் அளவுக்கு, முன்னாள் மந்திரி பெசாரும், அமைச்சருமான  அவருக்கு இந்தத் தொகுதியில் செல்வாக்கு இன்னும் இருக்கிறது. பல இன மக்களின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக பாஸ் கட்சிக்கு சீன, இந்திய வாக்குகள் கிடைக்காது என்பதால், மூன்றாவது இடத்தையே பாஸ் கட்சிக் கைப்பற்ற முடியும் என்ற அரசியல் பார்வையே தொகுதி எங்கும் பிரதிபலிக்கப்படுகிறது.

தனக்கு எதிராக ஓரினப் புணர்ச்சி புகார் கொடுத்த சைபுல் புகாரியுடன் அன்வார் கைகுலுக்குகிறார்…

மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வாக்காளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. அன்வாருக்கு எதிராகச் சில குறைகளைச் சொல்வதற்கும், தேர்தல் புகார்களைச் சொல்வதற்கும்தான் அவர்கள் இயங்குகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. குறிப்பாக அன்வாருக்கு எதிராக ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சைபுல் புகாரி போட்டியிடுவதும் இதைத்தான் காட்டுகிறது.

எத்தனை விழுக்காடு வாக்களிப்பு?

போர்ட்டிக்சன் முழுக்க பேசப்படும் – எதிர்பார்க்கப்படும் – ஒரு விவகாரம் எத்தனை விழுக்காட்டினர் திரண்டு வந்து வாக்களிப்பர் என்பதுதான். போட்டி கடுமையாக இல்லை என்றாலும், எதிர்காலப் பிரதமராக பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும் அன்வாருக்குத் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் – அதன் மூலம் தொகுதி மேலும் மேம்பாடுகள் காணும் – என்ற எண்ணம் வாக்காளர்களிடையே அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்கள்.

அதற்கேற்ப, பிரச்சாரம் தொடங்கியவுடனேயே சில பிரம்மாண்டமான வளர்ச்சித் திட்டங்கள் போர்ட்டிக்சனில் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஏர் ஆசியாவின் சுற்றுலாத் திட்டமும் இதில் அடங்கும். பல பெரிய முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்க காத்திருக்கிறார்கள் என அன்வாரும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

மேலும், அன்வாரை மிகப் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணி மற்றும் பிகேஆர் கட்சியினரும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்வார்-மகாதீரை ஒரே மேடையில் இணைத்தது போர்ட்டிக்சன் இடைத் தேர்தல்…

இத்தகைய சூழ்நிலைகளோடு நாளை சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வாரின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்ட ஒன்று என்றாலும், எத்தனை விழுக்காட்டினர் வாக்களிப்பர் – அவர்களில் அன்வாருக்கு ஆதரவாக எத்தனை வாக்குகள் விழும் – அவருக்கு அடுத்த நிலையில் வரப்போவது இசா சமாட்டா அல்லது பாஸ் கட்சியா – என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது.

– இரா.முத்தரசன்

அடுத்து : போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (பாகம் 3) : “80 விழுக்காடு இந்திய வாக்குகள் அன்வாருக்கு…” – சட்டமன்ற உறுப்பினர் இரவி கணிக்கிறார்.