Home நாடு போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (1) : விறுவிறுப்பில்லாத இடைத் தேர்தலில் சுறுசுறுப்பான அன்வார்!

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (1) : விறுவிறுப்பில்லாத இடைத் தேர்தலில் சுறுசுறுப்பான அன்வார்!

963
0
SHARE
Ad
போர்ட்டிக்சன் வாக்காளர் சந்திப்புக் கூட்டத்தில் அன்வார்

போர்ட்டிக்சன் – நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் – கவனித்துக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் என்னதான் நடக்கிறது என்பதை நேரடியாகச் சென்று காண்பதற்காக ஒரு நாளில் அந்த அழகான கடற்கரை நகரை வலம் வந்தபோது, அங்கே அவ்வளவாக சுறுசுறுப்போ, விறுவிறுப்போ எங்குமே காணப்படவில்லை.

அதற்குக் காரணம், அன்வாரின் ஆளுமை, பிரச்சாரம் செய்யும் திறமை. “என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே கண்ணில் தென்படவில்லை” என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை கூறியிருந்தார்.

அதுதான் நடக்கிறது அன்வார் போட்டியிடும் போர்ட்டிக்சனிலும்!

#TamilSchoolmychoice

தொகுதி முழுக்க அன்வாரின் பதாகைகள் – சுவரொட்டிகள்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன! ஆங்காங்கே அவருக்கான தற்காலிகப் பிரச்சாரக் கொட்டகைகள்! சில இடங்களில் பிரம்மாண்டமான எழுந்து நிற்கிறது அவரது படம் தாங்கிய பதாகைகள் (பேனர்கள்). சில கார்கள் அன்வாரின் படத்தையும் பிகேஆர் மற்றும் பக்காத்தான் கட்சி சின்னத்தையும் முழுக்க வரைந்து கொண்டு நகரை வலம் வருகின்றன.

ஒரு மிகப் பெரிய பயணப் பேருந்து அன்வாரின் பெரிய படத்தையும் பக்காத்தான் சின்னத்தையும் வரைபடமாகக் கொண்டு, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தின் முன் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.

அன்வாரின் சுறுசுறுப்பு

கடலலை தாலாட்டும் போர்ட்டிக்சனின் அழகிய தோற்றம்

நாம் போர்ட்டிக்சன் நகரை வலம் வந்த நாளில் (புதன்கிழமை அக்டோபர் 10) பிற்பகலில் அன்வாரின் சந்திப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போர்ட்டிக்சனில் இயங்கும் தனியார் மின்ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களின் ( IPP) பணியாளர்களை அங்குள்ள பிரபல தங்கும் விடுதி ஒன்றில் விருந்பசரிப்போடு சந்தித்துப் பிரச்சாரம் செய்தார் அன்வார்.

71 வயது முதுமை, தோள்பட்டை அறுவைச் சிகிச்சை, பல ஆண்டுகால சிறைவாசம் – இப்படி எதுவுமே அன்வாரைச் சிதைக்காத தன்மைதான் அவரிடம் இருந்து வெளிப்பட்டது. தொப்பை கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காத மெல்லிய உடல்வாகோடு சுறுசுறுப்பாக வாக்காளர்களிடையே வலம் வந்தார். மேடையில் சிறிது நேரம் உரை. பின்னர் எழுந்து சென்று ஒருவர் ஒருவராக கைகொடுத்து நலம் விசாரித்தார்.

அன்வாரின் பிரச்சார பேருந்து

அங்கிருந்து கிளம்பும்போது நிகழ்ச்சி நடந்த தங்கும் விடுதியின் கீழ்மாடியிலிருந்து படிக்கட்டுகளில் இருந்து இரண்டு இரண்டு படிகளாகத் தாவிக் குதித்து வேகமாக அவர் தாண்டிச் சென்றதைப் பார்க்கும்போது இவருக்கா முதுகு வலி – தோள்பட்டை அறுவைச் சிகிச்சை – இவருக்கா 71 வயது – என நமக்கு நினைக்கத் தோன்றுகின்றது.

பிரச்சசாரத்தில் மிகத் துல்லிதமான நேரக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார் அன்வார். சரியாக நிகழ்ச்சிக்குச் சென்று, சம்பிரதாயங்கள் முடிந்த உடனேயே புறப்பட்டு விடுகின்றார். அவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாவலர் கார்கள் உடன் செல்கின்றன.

தீவிரப் பிரச்சாரத்திற்கிடையிலும், கடற்கரையில் அன்வாரின் மெதுவோட்டப் பயிற்சி

முதல் நாள் இரவே அவரது சமூக வலைத் தளங்களில் அவரது நிகழ்ச்சி நிரல், நேரம் வாரியாக வெளியிடப்படுகிறது. காலை 8.00 மணிக்கு தொகுதியில் உள்ள உணவகங்கள் ஏதாவது ஒன்றில் காலை உணவோடு தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் அன்வார். வரிசையாக சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி வாக்காளர்களைச் சந்திக்கிறார். இடையிடையே தேர்தல் நடவடிக்கை அறையில் கட்சியினரோடு கூட்டங்கள் நடத்தி, பிரச்சார உத்திகளையும், தொகுதியில் நிலவும் அரசியல் நிலவரங்களையும் ஆராய்கிறார். தீர்வுகள், இலக்குகள் வழங்குகிறார்.

பின்னர் மாலையில் முக்கிய பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம்.

இப்படியாகச் செல்கிறது அன்வாரின் பிரச்சாரம்!

பழங்குடி மக்களுடன் அன்வார்…

நாம் முன்பு கூறியபடி, அவரை எதிர்த்து நிற்கும் ஒரே கட்சி பாஸ் மட்டுமே! மற்றவர்கள் எல்லாம் சுயேச்சைகள். எனவே, அன்வாருக்கு நிகராக யாருமே அங்கு போட்டி கொடுக்கவில்லை.

ஆனால், அன்வாரோ எதையும் லேசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ தனக்குக் கடுமையான எதிர்ப்பு இருப்பதைப் போலவும், தன்னை எதிர்த்து வலுவான வேட்பாளர்கள் நிற்பது போலவும், மிகக் கடுமையாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

-இரா.முத்தரசன்

அடுத்து: போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை      (பாகம் 2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?