Home நாடு மலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

மலேசியத் தமிழ்க்கல்வி : 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

7508
0
SHARE
Ad
தமிழ்க் கல்வி முதன் முதலாகக் தொடங்கப்பட்ட பினாங்கு பிரீ ஸ்கூல்….

(21 அக்டோபர் 1816-ஆம் ஆண்டில் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் தொடங்கப்பட்ட தமிழ்க் கல்வி இன்றுடன் 202 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதனை முன்னிட்டு மலேசியத் தமிழ்க் கல்வி ஆர்வலரும், பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளருமான சுப.நற்குணன் வழங்கும் சிறப்புக் கட்டுரை இது)

2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21அம் நாள், நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 202 ஆண்டுகள் நிறைவடைகிறது.

கடந்த 202 ஆண்டுகளாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் மிகையாகாது.

கட்டுரையாளர் சுப.நற்குணன்
#TamilSchoolmychoice

மலேசியாவில் 202 ஆண்டுகள் நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை.

மலேசியத் தமிழ்க் கல்வியின் வரலாறு…

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கென்று தனி வரலாறு உண்டு. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் மொழி வளர்ச்சியிலும் சமுதாய மேம்பாட்டிலும் ஆற்றியுள்ள பங்களிப்புகள் நிறைய உண்டு. மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்று வாழ்வில் முன்னேறியவர்கள் பற்றி ஆயிரமாயிரம் வெற்றிக் கதைகள் உண்டு.

1816 மலேசியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. அன்றைய காலத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார் அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது.

பினாங்கு பொதுப்பள்ளி அல்லது ஆங்கிலத்தில் Penang Free School என்பதுதான் அந்தப் பள்ளி. ஆங்கிலம் வழி கல்வி கற்க இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தான் முதன்முதலாக, நமது அன்னை மொழியாம் தமிழ் மொழிக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 21.10.1816 நாளன்று அன்றைய Penang Free School பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்டு அட்சிங்ஸ் என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.

அந்தக் காலத்தில் ஓலைக் குடிசையில் இயங்கிய தமிழ்ப் பள்ளி….

அன்று தொடங்கி இன்று வரையில் நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்ப்பள்ளிகள் சீரும் சிறப்புடன் இயங்கி வருகின்றன; தமிழ்க்கல்வி இடையறாது நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகின்ற செய்தியாகும்.

அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி சரியாக 202 ஆண்டுகளைக் கடந்து இன்று அரச வேராக ஆழ ஊன்றி ஆல விழுதுகளாகப் பெருகி 525 பள்ளிகளில் தமிழ்க்கல்வி பயிலப்படுகிறது என்பது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொன்னால் மிகையாகாது.

சுதந்திரம் பெற்ற 1957இல் 888 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இருந்தன. அப்பொழுது ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளின் காரணமாக 360 தமிழ்ப்பள்ளிகளை நாம் கால ஓட்டத்தில் தொலைத்துவிட்டோம் என்பது வருத்தத்திற்குரிய வரலாறு.

ஆயினும், கடந்த காலத்தின் கசப்பான அனுவபத்தில் நாம் பாடம் கற்றுக்கொண்டோம். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு அடுத்துவரும் நூற்றாண்டில் மிச்சம் இருக்கும் 525 தமிழ்ப்பள்ளிகளை நாம் காப்பாற்றி வைக்க வேண்டும். அதற்காக ஆக்ககரமான நடவடிக்கைகளை நாம் செய்தாக வேண்டும். கடந்துபோன வரலாற்றைக் குறைபேசாமல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை நோக்கி நாம் நகர வேண்டும்.

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இப்போது வெளிநாட்டிலும் சாதனை படைக்கின்றனர்…

தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.

பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்மொழியைப் படிக்கும் வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம் என்பதைச் சொல்லும் பொழுதே நாவெல்லாம் இனிக்கிறது; மனமெல்லாம் மணக்கிறது.

இந்தியா, தமிழ்நாடு, இலங்கை முதலான தமிழின் தாய்நிலத்திற்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 202 ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து வருவதும் நிலைபெற்று வாழ்வதும் கல்வி மொழியாக விளங்குவதும் போற்றுதலுக்கு உரிய மரபு; கொண்டாடப்பட வேண்டிய மாண்பு என்றால் அது மிகையாகாது.

மலேசியத் தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு. பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகள், கல்வியாளர்கள், நிபுணர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், விளையாட்டாளர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், அனைத்துலக நிலையிலான சாதனையாளர்கள் என வெற்றியாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து உருவாகி வந்திருக்கின்றனர். அன்று தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த பலரின் வம்சாவளியினர் இன்று முதலாளிகளாகவும் திறன்மிக்க தொழிலாளர்களாவும் தொழில் அதிபர்களாகவும் உருவாகுவதற்குத் தமிழ்ப்பள்ளிகள் பங்காற்றியுள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு நிறைவாகவே இருக்கின்றது.

1816 முதல் 2018 வரையில் 202 ஆண்டுகளில் பல்வேறு இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளாதார சவால்கள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் வெற்றிக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். அதே வேளையில், இந்த வெற்றிக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும் மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆங்கில நாடகப் போட்டியில் பங்கு பெற்ற மாசாய் தமிழ்ப் பள்ளி…

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி நிலைபெற்று வாழ வேண்டும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிகளை முனைப்போடு முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு மலேசியத் தமிழர்களுக்கு உள்ளது. தமிழ்ப்பள்ளிகளைச் சிறந்த கல்வி நிறுவனங்களாக உருவாக்க வேண்டும். கூடவே, தமிழ்ர்களுக்கான பண்பாட்டு நடுவங்களாகவும் தமிழ்ப்பள்ளிகள் உருவாக வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தமிழ்ப்பள்ளிகள் மலேசியத் தமிழ்க் குழந்தைகளின் இரண்டாம் கருவறைகளாக மாறிடவேண்டும். தமிழ்ப்பள்ளிகள் தமிழர்களின் முதன்மைத் தேர்வாக அமைந்திட வேண்டும். நம்முடைய அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் அடையாளமும் தமிழ்ப்பள்ளியிலும் தமிழ்க்கல்வியிலும் தொடங்குகிறது என்கிற விழிப்புணர்வை மலேசியத் தமிழர்கள் பெற வேண்டும்.

வாழ்க தமிழ்ப்பள்ளி! வளர்க தமிழ்க்கல்வி!

எழுத்தாக்கம்;-
தமிழ்க்கல்வி ஆர்வலர்
சுப.நற்குணன்