கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் 3 தேசிய உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ டி.முருகையா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர்.
மஇகா தேர்தல்களுக்கான அதிகாரபூர்வ முடிவுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்தார்.
டத்தோ டி.மோகன் 9,093 வாக்குகள் பெற்று 10 வேட்பாளர்களில் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த டத்தோ சிவராஜ் சந்திரன் 6,803 வாக்குகளைப் பெற்றார்.
டத்தோ டி.முருகையா 5,984 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார்.
அவருக்கு அடுத்த நிலையில் நான்காவதாக வந்த ஏ.கே.இராமலிங்கம் 100 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை சிவராஜிடம் பறிகொடுத்தார். இராமலிங்கத்திற்கு 5,884 வாக்குகள் கிடைத்தது.
ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ எம்.அசோஜன் 5-வது இடத்தையும், ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் ரவின்குமார் 6-வது இடத்தையும், நெகிரி செம்பிலான் மாணிக்கம் லெட்சுமணன் 7-வது இடத்தையும், ஆர்.கே.ரமணி கிருஷ்ணன் 8-வது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களில் அன்பழகன் பொன்னுசாமி 9-வது இடத்தையும், கே.டி.பாலா 10-வது இடத்தையும் பிடித்தனர்.