Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘வடசென்னை’யின் இருண்ட பக்கங்கள் – இரசிக்கவில்லை

திரைவிமர்சனம்: ‘வடசென்னை’யின் இருண்ட பக்கங்கள் – இரசிக்கவில்லை

1392
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து – இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘வடசென்னை’யின் ஒரு பாதி நெஞ்சைத் தொடும் வகையில் அமர்ந்திருந்தாலும், இன்னொரு பாதி இரசிக்கும்படி இல்லை.

குறிப்பாக, வடசென்னையின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படமாக இருந்தாலும், அந்த வட்டாரத்தின் இருண்ட பக்கங்களை மட்டும் – தாதாக்கள், குண்டர்கள், வெட்டுக் குத்து, ரவுடிக் கும்பல்களுக்கிடையில் நிலவும் துரோகம், காட்டிக் கொடுக்கும் தன்மை – ஆகியவற்றை மட்டுமே காட்டியிருப்பது ஒரு குறையாகப் படுகிறது.

குத்துச் சண்டை, கேரம் விளையாட்டு, காற்பந்து, மீனவர்களின் வாழ்க்கை, மார்வாடிகள் உள்ளிட்ட வட இந்தியர்களின் வாழ்க்கை, என பல பரிமாணங்களைக் கொண்ட வட சென்னையின் சாதக அம்சங்களில் கேரம் விளையாட்டை மட்டுமே கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

#TamilSchoolmychoice

உதாரணமாக, ‘மெட்ராஸ்’ படத்திலும், ‘இறுதிச் சுற்று’ படத்திலும் வட சென்னையின் சில சாதக அம்சங்களைக் காட்டியிருப்பார்கள். ஆனால் இந்தப் படத்திலோ முழுக்க, முழுக்க தாதாக்கள் மற்றும் ரவுடிகளின் வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள்.

இதைத் தவிர்த்து படத்தின் கால்வாசி சிறைக்குள் கைதிகளுக்கிடையில் நடக்கும் சம்பவங்களைச் சுற்றியே வருகிறது. இதைப்போன்ற பல காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் இடம் பெற்றுவிட்டதால், அதையே திரும்பத் திரும்பக் காட்டுவது போரடிப்பதோடு படத்தின் வலுவான திரைக்கதைப் பின்னணிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறைக்குள் நடக்கும் பகுதிகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு, வட சென்னையின் மக்களையும், அதன் மற்ற கதைப் பகுதியையும் வலுப்படுத்தியிருந்தால், திரைப்பட வரலாற்றுப் பதிவாக ‘வடசென்னை’ அமைந்திருக்கும்.

மேலும், நேரடியாகச் சொல்லிவிடக் கூடிய சில இடங்களில் கூட வருடம் வாரியாக முன்னும் பின்னும் செல்வதும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு மூன்று கதாபாத்திரங்களின் சம்பவங்களை எடுத்துக் கூறுவதும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இப்போது எந்தக் காலகட்டத்தில் இருக்கிறோம் என சில இடங்களிலாவது இரசிகர்கள் குழம்புவது நிச்சயம் நடக்கும்.

படம் முழுவதும் பெரும்பகுதி இரவு நேரங்களில் நடப்பது போலக் காட்டுவதும் – பின்னர் மற்ற நேரங்களில் நடக்கும் சம்பவங்களைக் கூட கொஞ்சம் இருட்டாகவும், மங்கலாகவும் ஒளிப்பதிவில் காட்டியிருப்பது – படம் முடிந்ததும் ஏதோ ஓர் இருட்டு வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்தக் குறைகளைத் தவிர, மற்ற அம்சங்களில் படமும் வெற்றி மாறனும் நிமிர்ந்து நிற்கிறார்கள். தனுஷின் ஆர்ப்பாட்டம் இல்லாத – இடத்துக்கு தேவையானதை மட்டும் கொடுக்கும் நடிப்பு கவர்கிறது.

படத்தில் கதாநாயகி போன்று அனைவரையும் கவர்ந்திருப்பவர் ஆண்ட்ரியாதான்! அண்மையக் காலமாக கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்ட்ரியா, இந்தப் படத்தில் துணிந்து, (இயக்குநர்) அமீருக்கும், சமுத்திரகனிக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். எப்படி ‘இருவருக்கும் ஜோடி’ என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு வலுவான கதாபாத்திரம் – அழுகை, ஆத்திரம், வஞ்சகம், சூழ்ச்சி, சோகம், பழிவாங்கும் குரோதம் – என பல முகங்களைக் காட்டும் கதாபாத்திரம் – என்றாலும், அதையெல்லாம் காட்டும் அதே வேளையில்  சில இடங்களில் துணிச்சலான கவர்ச்சி காட்டியிருப்பது ஆண்ட்ரியாவின் தனித்துவம் என்றுதான் கூற வேண்டும்.

படத்தில் நிறையக் கதாபாத்திரங்கள் இருப்பது போன்று தோன்றுகிறது. சொல்ல வந்த கதைக்கு இத்தனை கதாபாத்திரங்கள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

படத்தைத் தூக்கிப் பிடிக்கும் இன்னொரு தூண் சந்தோஷ் நாராயணனின் இசை. அசத்தலான, வித்தியாசமான பின்னணி இசை. அதோடு, வட சென்னையின் கானா பாடல்களை அதே உருக்கத்தோடும், அதே தாக்கத்தோடும் திரையில் கொண்டுவந்திருப்பதற்கும் அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்!

இரண்டு மூன்று கதாபாத்திரங்களை வைத்து ‘விசாரணை’ படத்தில் மிக எளிமையாக வெற்றி மாறன் கொடுத்த உணர்ச்சிக் குவியல்களை, சினிமா அனுபவத்தை, வட சென்னையில் பார்க்க முடியவில்லை. தனுஷ் வரும் சில காட்சிகள் நமக்கு ‘புதுப்பேட்டை’ படத்தை நினைவுபடுத்துகின்றன.

மற்றபடி பல வகைகளில் வட சென்னை தமிழ்த் திரையுலகின் முக்கியப் படமாக உயர்ந்து நிற்கிறது.

-இரா.முத்தரசன்