கோலாலம்பூர், மார்ச் 30-கிறிஸ்தவர்கள் நாளை (31-ந்தேதி) ஏசுநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெரு விழாவை கொண்டாடுகிறார்கள்.
சிலுவையில் மரணம் அடைந்த இயேசு கிறிஸ்து, மூன்றாம் நாளில் மீண்டும் உயிரோடு வந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த அடிப்படை நம்பிக்கை மீதுதான் கிறிஸ்தவ சமயம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
உலகில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ கல்லறைகள் உள்ளன. உலக நாடுகளையும், சமயங்களையும் வளர்த்தெடுத்த மாபெரும் தலைவர்களின் கல்லறைகள் அனைத்தும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன.
ஆனால், ஒரே ஒருவரின் கல்லறை மட்டும் திறந்தே இருக்கிறது. அவர் போர் செய்யவில்லை, உலக அரசுகளை கட்டி எழுப்பவில்லை.
அவர் வாழ்ந்தபோதும் அனைவரும் அவரை எதிர்த்தார்கள், இறந்த நேரத்திலும் மக்கள் அவரை ஏளனம் செய்தார்கள். அவர் ஏழைகளோடும், பாவிகளோடும் வாழ்ந்தார், இறந்த போதும் கயவர்கள் நடுவில் சிலுவையில் தொங்கினார்.
கிறிஸ்தவர்களால் இறைமகன் என்று அழைக்கப்படும் அவர்தான் இயேசு. சாவையே லட்சியமாக கொண்டு வாழ்ந்த இயேசு கிறிஸ்து, தமது பணி வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.
இதை சிறப்பிக்கும் வகையில், ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்!