Home நாடு அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய அமெரிக், தீபக் வெளியிட்ட ஆதாரங்கள் போதும் – கிறிஸ்டோபர்

அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய அமெரிக், தீபக் வெளியிட்ட ஆதாரங்கள் போதும் – கிறிஸ்டோபர்

1156
0
SHARE
Ad

Christopher Leong

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30 – மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலையை மறுவிசாரணை செய்ய சட்டத்துறைக்கு, சமீபத்தில் வெளியான புதிய ஆதாரங்களே போதுமானதாக இருக்கும் என்று வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங் (படம்) கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சட்டத்துறைத் தலைவரான அப்துல் கனி பட்டேல், அல்தான்துன்யாவின் கொலையை மறுவிசாரணை செய்ய சட்டத்துறைக்கு புதிய ஆதாரங்கள் தேவை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று காலை வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியோங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இக்கொலை தொடர்பாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவல்களில் நிறைய உண்மைகள் இருப்பதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை மறுவிசாரணை செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலா, பிரதமர் நஜிப் துன்  ரசாக்கையும், அவரது மனைவி ரோஸ்மாவையும் சம்பந்தப்படுத்தி, தான் பதிவு செய்து இருந்த முதல் சத்தியப்பிரமாணத்தில் இருந்து பின் வாங்குவதற்கு முக்கிய கருவியாகச் செயல்பட்டது கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் மற்றும் வழக்கறிஞர் செசில் ஆப்ரஹாம் என்ற உண்மை கூட தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் தான் கிடைத்தது என்றும், எனவே மேலும் அது போன்ற தொடர் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் அப்போது தான் இக்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி  நடைபெற்ற வழக்கறிஞர் மன்ற ஆண்டுக் கூட்டத்தில் பேசிய பாலாவின் வழக்கறிஞரான அமெரிக் சிடு, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் உத்தரவின் காரணமாகத்தான் தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததாக வழக்கறிஞர் சிசில் ஆப்ரஹாம் ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஆகவே, அல்தான்துன்யா கொலையை உடனடியாக மறுவிசாரணை செய்ய அமெரிக் சிடு வெளியிட்ட இந்த ஆதாரம் ஒன்றே போதும், ஆனால் சட்டத்துறை அந்த ஆதாரத்தை முக்கியமானதாகக் கருதாமல் ‘புதிய ஆதாரங்கள் தேவை’ என்று தொடர்ந்து  அறைக் கூவல் விடுத்து வருகிறது.