கோலாலம்பூர் – சில நாட்களுக்கு முன்னம் முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவிக்க நீதிமன்றம் வந்திருந்தார் நஜிப் துன் ரசாக்.
அதே போல, நேற்று வியாழக்கிழமை நஜிப் மீண்டும் நீதிமன்றத்தில் 6 குற்றவியல் நம்பிக்கை மோசடிகளுக்காக குற்றம் சாட்டப்பட்டபோது, சாஹிட் ஹமிடி நீதிமன்றத்திற்கு வருகை தந்து தனது ஆதரவைப் புலப்படுத்தினார்.
கடந்த முறை போன்று நேற்று நஜிப் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது அதிக அளவில் ஆதரவாளர்களோ, அம்னோ உறுப்பினர்களோ திரளவில்லை. அவரது ஆதரவுத் தளம் தேய்ந்து போயிருக்கலாம் என்பது ஒரு கண்ணோட்டமாக இருந்தாலும், நஜிப் குற்றம் சாட்டப்படுவது இது மூன்றாவது முறை என்பதால், அவரது ஆதரவாளர்களுக்கு சுவாரசியம் குறைந்து போரடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எனினும் ஒரு சில நெருங்கிய நண்பர்களும், அரசியல் சகாக்களும் மட்டுமே நேற்று நஜிப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் வந்தனர். சாஹிட் ஹமிடி தவிர்த்து, பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூதின் அப்துல் ரஹ்மான், மலேசியா பாரு கண்காணிப்புக் குழுத் தலைவரும் அம்னோ மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ லோக்மான் நூர் அடாம் ஆகியோரும் நேற்று நீதிமன்றம் வந்தனர்.
காலை 9.00 மணியளவில் நீதிமன்றம் வந்த சாஹிட் ஹமிடி நஜிப்புடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறினார். அங்கிருந்து நாடாளுமன்றம் செல்வதாக சாஹிட் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.