புத்ரா ஜெயா – நிதி அமைச்சின் நிதி விவகாரங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நஜிப் துன் ரசாக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லாவும் இன்று வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம் வந்தடைந்தனர்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.55 மணியளவில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் விசாரணைக்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
ஆனால் நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்த நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா கைது செய்யப்பட்டு நேற்றிரவு அங்கேயே தடுத்து வைக்கப்பட்டார்.
1எம்டிபி கடன்கள் தொடர்பாக, இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் கம்பெனி (International Petroleum Investment Co -IPIC) என்ற நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட தொகைகள் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, நஜிப் பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இர்வான் செரிகார் அப்துல்லா குற்றம் சாட்டப்படுவது இதுவே முதன் முறையாகும்.