சென்னை – ஜோதிகா கதாநாயகியாகவும், விதார்த் நாயகனாகவும் நடிக்கும் ‘காற்றின் மொழி’ திரைப்படம் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் புதுமையான முறையில் உருவாக்க நினைத்த படக் குழுவினர் அதற்காக வித்தியாசமான பாடல் எழுதும் போட்டி ஒன்றை நடத்தினர்.
கவிஞர்கள் தாங்கள் எழுதிய பாடல் வரிகளைத் தங்களுக்கு அனுப்பி வைக்கும்படி படக் குழுவினர் கேட்டுக் கொள்ள அதன்படி 700-க்கும் மேற்பட்ட பாடல்கள் உலகம் எங்கும் இருந்து வந்து குவிந்திருக்கின்றன. அதிலிருந்து சிறந்த பாடல்களை எழுதிய சுமார் 60 பாடலாசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சென்னைக்கு நேரில் வரும்படி படக் குழுவினர் அழைப்பு விடுத்தனர்.
அந்த 60 பாடலாசிரியர்களில் மலேசியாவைச் சேர்ந்தவரான பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார். பீனிக்ஸ் தாசன் ‘செல்லியல்’ ஊடகத்தின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 60 பாடலாசிரியர்களை மீண்டும் சென்னையில் சலித்தெடுத்து இருவரை மட்டும் பாடல் எழுத ‘காற்றின் மொழி’ படக் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். அந்த இருவரில் மலேசியாவைச் சேர்ந்த பீனிக்ஸ்தாசனும் ஒருவராவார்.
அவருடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றொருவர் சென்னையைச் சேர்ந்த பத்மஜா ஸ்ரீராம் என்பவராவார்.
காற்றின் மொழி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.