கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நஜிப் துன் ரசாக் மீதும் முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, இருவர் மீதும் கூட்டாக 6 குற்றவியல் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அரசாங்கத்துக்குச் சொந்தமான பணத்தை நிதி அமைச்சின் சார்பில் தவறுதலாகக் கையாண்டதற்காக அவர்கள் இருவர் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவர்களுக்கு 3 மில்லியன் ரிங்கிட் தொகை பிணை (ஜாமீன்) வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
வழக்கறிஞர்களின் விவாதங்களுக்குப் பின்னர் அவர்களுக்கான பிணைத் தொகை தலா 1 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது. அவர்கள் இருவரின் கடப்பிதழ்களும் முடக்கப்பட்டதோடு, இந்த வழக்குகள் தொடர்பான சாட்சிகளுடன் அவர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் நீதிபதி பிணை வழங்குவது தொடர்பில் நிபந்தனை விதித்தார்.
நிதி அமைச்சின் நிதி விவகாரங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க நஜிப் துன் ரசாக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லாவும் இன்று வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம் வந்தடைந்தனர்.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.55 மணியளவில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் விசாரணைக்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
ஆனால் நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்த நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா கைது செய்யப்பட்டு நேற்றிரவு அங்கேயே தடுத்து வைக்கப்பட்டார்.
ஏற்கனவே, நஜிப் பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இர்வான் செரிகார் அப்துல்லா குற்றம் சாட்டப்படுவது இதுவே முதன் முறையாகும்.