புத்ரா ஜெயா – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா ஆகிய இருவரும் நாளை புதன்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வரவேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1எம்டிபி கடன்கள் தொடர்பாக, இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் கம்பெனி (International Petroleum Investment Co -IPIC) என்ற நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட தொகைகள் தொடர்பில் விசாரிக்கப்பட அவர்கள் இருவரையும் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு வரும்படி ஊழல் தடுப்பு ஆணையம் அழைத்துள்ளது.
அவர்கள் இருவர் மீதும் நாளை விசாரணைகள், வாக்குமூலங்கள் வழங்குவது போன்ற நடைமுறைகள் முடிந்ததும், எதிர்வரும் வியாழக்கிழமையன்று அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாக பெர்னாமா செய்திக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
ஏற்கனவே, நஜிப் பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இர்வான் செரிகார் அப்துல்லா குற்றம் சாட்டப்படுவது இதுவே முதன் முறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நிதி அமைச்சின் கணக்கு விவரங்கள் குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.