Home கலை உலகம் ஓரிரு வார்த்தைகள் கூட தமிழில் பேசாத நடிகை கிரண், அஸ்ட்ரோ பாடல் போட்டிக்குத் தேவையா?

ஓரிரு வார்த்தைகள் கூட தமிழில் பேசாத நடிகை கிரண், அஸ்ட்ரோ பாடல் போட்டிக்குத் தேவையா?

1971
0
SHARE
Ad
நடிகை கிரண் ரத்தோட்

கோலாலம்பூர் – கடந்த வாரம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அஸ்ட்ரோ விண்மீண் அலைவரிசையில் ஒளியேறிய அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் திறன்போட்டி நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து ‘இறக்குமதி’ செய்யப்பட்ட நடிகை கிரண் ரத்தோட் கலந்து கொண்ட விதம் பல மலேசிய இரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

தமிழ்த் திரையுலகமே எங்கே இருக்கிறார் கிரண் எனத் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரைக் கஷ்டப்பட்டுத் தேடி அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிக்கு அவரைப் போன்ற ஓர் ‘அபூர்வ’ கண்டுபிடிப்பைக் கொண்டுவந்து மலேசிய இரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு “பாராட்டுகள்” கூறவேண்டும்.

முதலாவதாக, மலேசியக் கலைஞர்களுக்கென நடத்தப்படும் பாடல் திறன் போன்ற போட்டிகளுக்கு, ஏற்கனவே, தமிழகத்திலிருந்து இசை தொடர்பான நீதிபதிகள் தருவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நடுவே சிறப்பு விருந்தினர்கள் என நடிகைகளும், நடிகர்களும் உள்ளே புகுத்தப்படுவது தேவைதானா?

#TamilSchoolmychoice

காரணம், இவர்கள் யாரும் இலவசமாக வந்து கலந்து கொள்வதில்லை. இவர்களுக்கென ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. அதுவும் ஏறத்தாழ வாரந்தோறும் ஒரு தமிழக நடிகரோ, நடிகையோ வரவழைக்கப்படுகிறார்.

உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கப் படைக்கப்படும் சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு நிகழ்ச்சிக்குக் கூட தமிழ் நாட்டிலிருந்து வரும் நடிகர் நடிகைகளுக்களுக்கு அஸ்ட்ரோ ஆயிரக்கணக்கில் செலவழித்து அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, அதன் மூலம்தான் உள்ளூர் கலையை வளர்க்கப் போகிறோமா?

அப்படி வந்து கலந்து கொள்பவர்கள் தரும் தேர்ச்சிச் சான்றிதழ்தான் நமது பாடகர்களுக்கு முக்கியமா?

சம்பந்தப்பட்ட தரப்புகள் சிந்திக்க வேண்டும்!

அப்படியே வரவழைப்பதாக இருந்தால் தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்களில் யாரையாவது வரவழைக்கலாம். அவர்களையும் கௌரவப்படுத்தியதாக இருக்கும். அவர்கள் தரும் ஆலோசனைகள், கருத்துகள் நமது உள்ளூர் கலைஞர்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். முக்கியமாக அதற்கான செலவுகளும் சினிமா பிரபலங்களுக்கு தரப்படுவதை விடக் குறைவாகவே இருக்கும்.

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஐவர்…

இந்த வரிசையில் கடந்த வாரம் கிரண் ரத்தோட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதுதான் உச்சகட்ட அவலம். காரணம், முழு நிகழ்ச்சியிலும் அவர் பேசிய தமிழ் ஓரிரு வார்த்தைகள் கூட இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். எனவே, நமது பாடகர்கள் பாடும் பாடல்களின் தன்மையோ, அர்த்தமோ நிச்சயம் அவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர் இசையறிவு கொண்ட (ஆண்ட்ரியா போன்று) கொண்ட நடிகையும் இல்லை. மொழியும் புரியாது. அப்புறம் ஏன் அவரை அழைத்தார்கள்?

ஒரு சிலர் வாதிக்கலாம்! டி.ஜே.டேவ் மற்றும் சில மலாய்ப் பாடகிகளும் அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டார்களே – அவர்களுக்கும் தமிழ் புரியாதே – என அவர்கள் வாதிக்கலாம்.

ஆனால், ஒரு முக்கிய வித்தியாசம் – அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் உள்ளூர் பாடகர்கள் – கலைஞர்கள்! எனவே, இசைக்கு மொழி எல்லைகள் கிடையாது என்பதற்கேற்ப அவர்களுக்குப் புரியாத தமிழ்ப் பாடல்களின் இசையின் நயத்தைக் கண்டிப்பாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். கருத்தும் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், கிரண் ரத்தோட்?

வந்ததற்கு கிரண் செய்த உருப்படியான காரியம் – இரண்டு குத்தாட்டம் போட்டதுதான்! தமிழகப் பாணியில் சொல்வதானால் – ‘ஐட்டம் சோங்’ – இரண்டுக்கு துள்ளாட்டம் போட்டார் கிரண்.

அந்த ஆட்டங்கள் கண்களுக்கு ‘குளிர்ச்சியாக’ இருந்தன என்பதைத் தவிர,

உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் – வளர்க்கும் – பாடல் திறன் போட்டி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு குத்தாட்ட நடிகை ஒருவரை வரவழைத்து சிறப்பிப்பதுதான் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தன்மையையும், தரத்தையும் உயர்த்தும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நினைத்தால்…

நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை!

அண்மையக் காலமாக, அஸ்ட்ரோ நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இதுபோன்று தமிழக சினிமா பிரபலங்களை இங்கு கொண்டு வந்து பங்கேற்ப வைப்பது வழக்கமாகி விட்டது. இதனால், மலேசியத் தமிழ் இரசிகர்கள் யாரும் புளகாங்கிதமோ – பெருமையோ – உற்சாகமோ அடைவதில்லை.

நீங்கள் அவர்களை வரவழைத்து நிகழ்ச்சிகளைப் போடுவதால் வேறு வழியின்றி பார்க்கிறார்களே தவிர, அதனால் மலேசிய இரசிகர்கள் இதை விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள் எனத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

எந்த ஒரு சினிமா பிரபலத்தைக் கொண்டுவந்தாலும் அவரைப் பார்ப்பதற்கும், படம் எடுப்பதற்கும், அவருடன் தம்படம் (செல்பி) எடுப்பதற்கும் ஒரு இரசிகர் கூட்டம் இருக்கவே செய்யும். அதை வைத்து ஒட்டுமொத்த தொலைக்காட்சி இரசிகர்களும் அவர்களை விரும்புகிறார்கள் – இரசிக்கிறார்கள் – எனக் கருதக்கூடாது.

தமிழக சினிமா பிரபலங்கள் இங்கு வருவதையோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ இங்கு யாரும் எதிர்ப்பதில்லை. ஆனால், அவ்வாறு வரவழைக்கப்படுபவர்கள் பொருத்தமானவர்களாக – குறிப்பாக அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்களாக இருக்க வேண்டியது முக்கியம்.

மாறாக, உள்ளூர் கலைஞர்களுக்கான பாடல் திறன் போட்டி ஒன்றில் – தமிழ்நாட்டிலிருந்து மறக்கப்பட்ட நடிகை ஒருவரை வரவழைத்து – அவரும் ஓரிரு வார்த்தைகள் கூட தமிழில் பேசாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு – நிகழ்ச்சியின் தன்மைக்கு நேர் எதிராக இரண்டு குத்தாட்டம் போட்டுவிட்டுச் செல்லும் முரண்பாட்டு அவலம் நிகழக் கூடாது என்பதைத்தான் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்!

-இரா.முத்தரசன்

(பின்குறிப்பு: கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று இன்று சனிக்கிழமை (அக்டோபர் 27) இரவு 7.30 மணிக்கு ஷா ஆலாம் மெலாவாத்தி உள் அரங்கில் நடைபெறுகிறது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 5 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தமிழக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பிரபல குரல் பயிற்சி நிபுணர் ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்)