Home உலகம் இலங்கை : வன்முறை வெடித்தது! ஒருவர் கொல்லப்பட்டார்!

இலங்கை : வன்முறை வெடித்தது! ஒருவர் கொல்லப்பட்டார்!

871
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் பரபரப்பான திருப்பங்களைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளதில், ஒருவர் கொல்லப்பட்டார்.

3 நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் இராஜபக்சேயைப் புதிய பிரதமராக நடப்பு அதிபர் சிறீசேனா இலங்கைப் பிரதமராக நியமித்தார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார். அமைச்சர்களையும் நீக்கினார்.

எனினும் ராஜபக்சே முறையாகப் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் நானே இன்னும் பிரதமராகத் தொடர்கிறேன் என்றும் நடப்புப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். தனது அதிகாரத்துவ இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துவரும் ரணில், அங்கு தனது ஆதரவாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் ஒன்று திரட்டி வைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த குழப்பங்களுக்கிடையில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அதிபர் மைத்திரிபால சிறீசேனாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

புதிய பிரதமர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடுதான் அதிபரால் நியமிக்கப்பட முடியும் என்பதால், பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சே நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை தொடர்ந்து பிரதமராக நீடிப்பார் என்றும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அனுமதியின்றி நாடாளுமன்றத்தை முடக்கியதற்கும் சபாநாயகர் ஜெயசூரியா அதிபர் சிறீசேனாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

வன்முறை வெடித்தது

இந்த விவகாரம் தொடங்கியது முதல் ராஜபக்சேவுக்கு ஆதரவான ஊழியர் சங்கங்களும், ஆதரவாளர்களும் அரசாங்கக் கட்டடங்களை முற்றைகையிட்டு, ரணிலுக்கு ஆதரவான அமைச்சர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

நாட்டின் அரசு சார்பு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைமையகத்தின் உள்ளே நுழைய, நீக்கப்பட்ட பெட்ரோலியத் துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பட்டபோது, அங்கு கைகலப்பு ஏற்பட்டது. ரணதுங்காவின் பாதுகாவலர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட, அதன் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து வன்முறைகள் நாடெங்கிலும் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில் இலங்கை விவகாரம் குறித்துக் கருத்துரைத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், அனைத்துத் தரப்புகளும் வன்முறையில் இறங்காமல், அமைதியான தீர்வுகளைக் காண முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதிபர் சிறீசேனா உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் இலங்கை மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கடமைகளை ஆற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – தங்களின் தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்ற உரிமை அவர்களுக்கு தரப்பட வேண்டும் என்றும் அறிக்கையொன்றின் வழி தெரிவித்தது.