Home கலை உலகம் ‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்

‘சர்கார்’ படத்துக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை – அதிமுக ஆர்ப்பாட்டம்

1345
0
SHARE
Ad

சென்னை – பட வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம், தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் படம் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை.

சர்கார் படத்தில் வரும் பல காட்சிகள் தமிழகத்தின் அதிமுக அரசைக் குறிவைத்துத் தாக்கி எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அரசாங்கத்தின் பல நல்ல பணிகளை தரக் குறைவாக விமர்சித்துக் காட்சிகள் உள்ளன என்றும் எழுந்துள்ள பரபரப்பான புகார்களைத் தொடர்ந்து இந்தப் படத் தயாரிப்பு குழுவின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அதிரடியாக இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரோடு கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். இதைத் தொடர்ந்து தமிழக அரசு சர்கார் படத் தயாரிப்புக் குழு மீதும், நடிகர் விஜய் மீதும் நேரடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று மதுரையில் சர்கார் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்கு ஒன்றின் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படத்தில் அரசியலுக்காக தனது தந்தையையே கொலை செய்யத் தயங்காத கொடூரமான வில்லியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் நடிகை வரலெட்சுமியின் கதாபாத்திரத்திற்கு கோமளவல்லி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லியாகும். இதனால் ஜெயலலிதாவைத் தரக் குறைவாக விமர்சித்திருக்கிறார்கள் என்று கூறி அதிமுகவினர் சர்கார் படத்தைத் திரையிடக் கூடாது என மதுரை திரையரங்கு முன்னால் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டங்கள் தமிழகம் எங்கும் பரவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறத்தில் சர்கார் படத்திற்கு இதுபோன்ற நடவடிக்கைகளால் இலவச விளம்பரம் என்றாலும், படத்திற்கு தமிழக அரசால் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.