கொழும்பு – மோசமாகிக் கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் சர்ச்சைகளுக்கிடையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிரடியாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதன் மூலம், அந்நாட்டின் அரசியல் குழப்பத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறார். இவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் சிறிசேனாவுக்கு இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன.
இதனால், ஒரு சட்டப் போராட்டத்திற்கும் சிறிசேனா வித்திட்டிருக்கிறார்.
தீடீர் தேர்தலுக்கு வழி வகுத்திருப்பதால், அரசியல் வியூக ரீதியாகவும் ஒரு சவாலான, சோதனையான கட்டத்திற்கு தன்னை உட்படுத்தியிருக்கிறார் சிறிசேனா.
ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், மகிந்த ராஜபக்சேயைப் பிரதமராக நியமித்த சிறிசேனா, எனினும் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவை ராஜபக்சே தரப்புக்கு பெற முடியவில்லை.
இந்நிலையில் நடப்பு நாடாளுமன்றத்திற்கான பதவிக் காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும்போதே எதிர்வரும் ஜனவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என சிறிசேனா அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் ரணிலின் அரசியல் கட்சியான யுஎன்பி எனப்படும் யுனைடெட் நேஷனல் பார்ட்டி சிறிசேனாவின் நாடாளுமன்றக் கலைப்பு அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்பதால் அதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது.
சிறிசேனா, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே இனி, இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரணில் இன்னும் தனது பிரதமருக்கான அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். தனது நீக்கம் சட்டவிரோதமானது என்றும் வலியுறுத்தி வருகிறார்.
இந்தப் புதிய போராட்டத்தினால், அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் சக்தி வாய்ந்த – அழுத்தம் கொடுக்கும் பிரிவாக – தமிழர்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவெடுத்திருக்கிறது.
ராஜபக்சே பிரதமராக நாங்கள் ஆதரவு தரமாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.