மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஹிண்ட்ராப் முன்மொழிந்துள்ள ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி அல்லது மக்கள் கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதற்காக அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார்.
ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு கால திட்ட வரைவில் தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் பிரச்சனைகள், கல்வி, உயர் கல்விக் கூடங்களில் இந்தியர்களுக்கான இடங்கள், அரசாங்கத் துறைகளில் வேலைவாய்ப்புகள், இந்திய வர்த்தகர்களுக்கான கடனுதவித் திட்டங்கள் போன்ற அம்சங்கள் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றன.
ரவாங்கிலுள்ள அருள்மிகு அகோர வீரபத்திரர் சங்கிலி கருப்பர் ஆலயத்தில் வேதமூர்த்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 21 நாட்களாக தொடர்ந்து கொண்டிருந்தார்.
இன்று பிற்பகல் 4 மணியளவில் வேதமூர்த்தி நினைவிழந்த காரணத்தால், அவர் ஜாலான் ஈப்போவிலுள்ள டாமாய் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹிண்ட்ராப் இயக்கத்தின் துணைத் தலைவர் சம்புலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சர்க்கரை அளவு குறைந்திருப்பது, உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் அவரது உடல் நிலை மோசமடைந்திருப்பதாக கூறியிருக்கின்றனர் என்றும் சம்புலிங்கம் தெரிவித்ததாக ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையின் இணையத் தள செய்தி தெரிவித்தது.
டாமாய் மருத்துவமனை வளாகத்தில் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழுமியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.