Home நாடு சீ பீல்ட் ஆலயம் : அதே இடத்தில் நிலை நிறுத்த சிலாங்கூர் அரசாங்கம் அனுமதி அளித்ததா?

சீ பீல்ட் ஆலயம் : அதே இடத்தில் நிலை நிறுத்த சிலாங்கூர் அரசாங்கம் அனுமதி அளித்ததா?

1665
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில், தற்போது சமூக ஊடங்களில் பகிரப்பட்டு வரும் ஆவணங்கள் உண்மையென்றால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரப்படும் ஆவணங்களுள் ஒன்று 27 ஆகஸ்ட் 2001 தேதியிட்ட, அப்போதைய சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த டத்தோ க.சிவலிங்கத்தின் கடிதம். அந்தக் கடிதத்தின்படி, சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தை தற்போதிருக்கும் அதே இடத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தும்படி, 8 ஆகஸ்ட் 2001-ஆம் நாள் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக, பெட்டாலிங் நில அலுவலக அதிகாரிக்கு அந்தக் கடிதம் மூலம் சிவலிங்கம் தெரிவித்திருக்கிறார். சிவலிங்கமே அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் (பார்க்க படம்)இரண்டாவதாக பகிரப்படும் ஆவணம் 17 மே 1993 தேதியிட்ட மனித வள துணையமைச்சரின் கடிதம். அந்தக் காலகட்டத்தில் மனித வள துணையமைச்சராக இருந்தவர் (டான்ஸ்ரீ) டத்தோ எம்.மகாலிங்கம். எனவே இந்தக் கடிதத்தை அவரே எழுதியிருக்கிறார் என நம்பப்படுகிறது.

சைம் யுஇபி (Sime UEP Development) நிறுவனத்திற்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தின்படி 1987-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசாங்கம், சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தை (சீ பீல்ட் ஆலயம் அமைந்திருக்கும் தோட்டநிலம்) மேம்பாட்டுக்காக அங்கீகரித்துள்ளதாகவும், ஆனால் அந்த அங்கீகாரத்தின் நிபந்தனைகள் என்னவென்றால், அங்குள்ள தமிழ்ப் பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதோடு, ஆலயம் அமைந்திருக்கும் இதே இடத்தில் நிலைநிறுத்த 1 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

#TamilSchoolmychoice

ஆட்சிக் குழு கூட்டக் குறிப்புகளையும் மனித வள துணையமைச்சரின் கடிதம் மேற்கோள் காட்டியிருக்கின்றது. (பார்க்க படம்).

1987-ஆம் ஆண்டில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தவரும் அதே மகாலிங்கம்தான். எனவே, அவருக்கு இந்த விவரங்கள் முழுமையாக, கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். 1990-ஆம் ஆண்டில் சுபாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்ற பின்னர் மனித வள துணையமைச்சராக மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய சீ பீல்ட் மாரியம்மன் ஆலய நிலமும் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்தான் வருகிறது. எனவேதான், மகாலிங்கம் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.

எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த ஆவணங்கள் உண்மையானால், 2001-ஆம் ஆண்டு வரை (சிவலிங்கம் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த காலகட்டத்தில்) இந்த ஆலயத்திற்கான நிலம் அந்த ஆலயத்திற்கென சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி அரசாங்க ஆட்சிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான கடிதமும் ஆட்சிக் குழு உறுப்பினரால், சம்பந்தப்பட்ட பெட்டாலிங் நில அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால், அதன் பிறகு ஏன் முறையான நிலப்பட்டா ஆலயத்திற்கு வழங்கப்படவில்லை? இதற்குக் காரணம் யார்? நில அலுவலகமா? அல்லது வேறு தரப்புகள் யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனரா?

சிவலிங்கம் 2007-ஆம் ஆண்டில் காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா-தேசிய முன்னணி சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவியேற்றவர் அப்போதைய ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரான கமலா கணபதி ஆவார்.

ஆனால், 2008 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தை இழந்து, பக்காத்தான்  ராயாட் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.

எனவே, இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?

ஆட்சிக் குழுவில் பதவியேற்றவர்கள் – அல்லது சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவினர் –  சீ பீல்ட் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலத்திற்கான அங்கீகாரத்தை மறு உறுதி செய்தனரா? – என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக – அடுத்தடுத்து எழுகின்றன!

இந்த ஆவணங்களின்படி, சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது, தற்போதிருக்கும் நிலத்திலேயே ஆலயம் நிலைநிறுத்தப்பட தேசிய முன்னணி அரசாங்கம் அங்கீகாரம் தந்திருக்கிறது எனப் பொருள்படுகின்றது.

ஆனால், 2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்து வருவது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்.

2001-ஆம் ஆண்டில் சிவலிங்கம் எழுதிய கடிதத்தின்படி பெட்டாலிங் நில அலுவலகம் ஏன் நிலத்தை ஆலயத்தின் பெயருக்கு மாற்றவில்லை? யாராவது தடுத்தார்களா?

ஆட்சிக் குழுவில் முடிவெடுக்கப்பட்ட பின்னர் அந்த முடிவை மாற்றுவது என்றால் மற்றொரு ஆட்சிக் குழுக் கூட்டத்தில்தான் அந்த முடிவு மாற்றி எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டதா?

கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன….

விடை தருவார் யாரோ?

-இரா.முத்தரசன்