புத்ரா ஜெயா – இடைக்கால மாமன்னராகப் பணிகளை ஆற்றி வரும் சுல்தான் நஸ்ரின் ஷா நேற்று திங்கட்கிழமை 4 கூட்டரசு நீதிமன்ற (பெடரல் கோர்ட்) நீதிபதிகள் மற்றும் 5 மேல்முறையீட்டு நீதிமன்ற (கோர்ட் ஆப் அப்பீல்) நீதிபதிகள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
டத்தோ தெங்கு மைமுன் துவான் மாட், டத்தோ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம், டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண், டத்தோ நளினி பத்மநாபன் ஆகியோரே அந்த நால்வராவர்.
இவர்களில் நளினி பத்மநாபன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கும் முதல் இந்தியப் பெண்மணியாவார். ஏற்கனவே இந்தியர்கள் சிலர் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்திருந்தாலும் இதுவரையில் இந்தியப் பெண்கள் யாரும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டதில்லை.
இதன்மூலம், இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஓர் அங்கீகாரத்தை வழங்கி நம்பிக்கைக் கூட்டணி மேலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
1 மார்ச் 2007-ஆம் நாள் ஷா ஆலாம் நீதிமன்ற ஆணையராக (Judicial Commissioner) பதவியேற்ற நளினி, 14 அக்டோபர் 2009-இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 12 செப்டம்பர் 2014-ஆம் நாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நளினி 25 நவம்பர் 2018 வரை அந்தப் பதவியை வகித்தார். நவம்பர் 26 முதல் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நளினி பதவி வகிப்பார்.
59 வயதான நளினி பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஐவர் பின்வருமாறு:
- டத்தோ லாவ் பீ லான்
- டத்தோ முகமட் சபிடின் முகமட் டியா
- டத்தோ இயூ ஜென் கீ
- டத்தோ நோர் பீ அரிபின்
- டத்தோ ஹஸ் சானா மெஹாட்