கோலாலம்பூர் – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி செல்லாது என மேல்முறையீட்டிலும் தீர்ப்பு கிடைக்குமானால், அங்கு நடைபெறவிருக்கும் மறு தேர்தலில் மஇகாவே போட்டியிடும் என அம்னோ தலைவரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்தார்.
“கேமரன் மலை பாரம்பரியமாக தேசிய முன்னணி போட்டியிட்ட தொகுதி என்பதால், அங்கு மீண்டும் மஇகாவே போட்டியிடும். நாங்கள் எங்களின் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவோம்” என நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய முன்னணி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களுடன் (செனட்டர்களுடன்) நடத்திய சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் சாஹிட் கூறினார்.
14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட சிவராஜ் சந்திரன் 5 முனைப் போட்டியில் 597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு 10,307 வாக்குகளும், அவரை எதிர்த்து நின்ற ஜசெகவின் எம்.மனோகரனுக்கு 9,710 வாக்குகளும், பாஸ் கட்சியின் வான் மகாடிர் வான் மாஹ்முட்டுக்கு 3,587 வாக்குகளும் கிடைத்தன. பெர்ஜாசா சார்பில் போட்டியிட்ட முகமட் தாஹிர் காசிம் 81 வாக்குகளும் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் 680 வாக்குகளும் பெற்றனர்.
கேமரன் மலை மறுதேர்தல் நடந்தால், மற்றொரு சுவாரசிய நகர்வு காத்திருக்கிறது. பாஸ் கட்சி போட்டியிடாமல் மஇகாவுக்கு ஆதரவு தந்தால், 14-வது பொதுத் தேர்தல் கணக்குப் படி பாஸ் கட்சியின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் மஇகா வேட்பாளருக்குக் கிடைக்கும்.