கோலாலம்பூர் – தேசிய முன்னணியைக் கலைத்து விட்டு அதற்குப் பதிலாக புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) மத்திய செயலவை ஈடுபட வேண்டும் என, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மசீசவின் 65-வது பொதுப் பேரவை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
தேசிய முன்னணி அதிகாரத்தை இழந்து நிற்கும் நிலையில், அதில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் உருமாற்றம் செய்து கொள்ளவும், தங்களின் அரசியல் கூட்டணிகளை மீண்டும் மறு ஆய்வு செய்யவும் அந்தக் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பும், அவகாசமும் தரப்பட வேண்டும் என மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.
எனவே, தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் மீண்டும் கூட்டணி உருமாற்றங்களை நிர்ணயிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ கா சியோங் கூறினார்.
எனினும், தேசிய முன்னணி கலைப்பு எவ்வாறு சாத்தியம் என்பது குறித்தும் எப்படி நடைமுறையில் செயல்படுத்தப்படும் என்றும் கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளிக்காமல் தவிர்த்த வீ கா சியோங், “எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்” எனவும் தெரிவித்தார்.