Home நாடு கேமரன் தொகுதியை விட்டுக் கொடுப்பதா – குலசேகரனின் முதிர்ச்சியற்ற கூற்று – டி.முருகையா சாடல்

கேமரன் தொகுதியை விட்டுக் கொடுப்பதா – குலசேகரனின் முதிர்ச்சியற்ற கூற்று – டி.முருகையா சாடல்

997
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “கேமரன்மலை இடைத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தேசிய முன்னணி விலகிக்கொள்ள வேண்டும். மேலும் வெறுமனே பணத்தை விரயமாக்காமல் இருப்பதற்காகவே தாம் அறிவுரை கூறுவதாக சொல்லும் மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரனின் கூற்று மிகவும் கேலிக் கூத்தானது” என மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா (படம்) சாடியிருக்கிறார்.

“மலேசியா ஜனநாயக நாடு. தேர்தல் என்பது மக்களின் முன்னுரிமை. நாங்களே போட்டியிடுகிறோம். நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் – என்று எப்படி அவரால் கூற முடிகிறது? இக்கூற்றே அவர் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்பதை பறைச்சாற்றுகிறது” என அவர் மேலும் கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 30) வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து குலசேகரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, கேமரன்மலை இடைத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தேசிய முன்னணி விலகிக்கொள்ள வேண்டும் என்றும், பணத்தை விரயமாக்காமல் இருப்பதற்காகவே தாம் அறிவுரை கூறுவதாகவும் ‘நகைச்சுவையாக’ கூறியதாக ஸ்டார் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

குலசேகரனின் கூற்றுக்கு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி பதிலளித்த முருகையா “வெற்றி, தோல்வி என்பது என்றுமே நிலையான ஒன்றல்ல. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே விலகிக்கொள்ளுங்கள் என்பது எங்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையுமே தூண்டுகிறது. கேமரன்மலை மஇகாவின் தொகுதி என்பதால் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு முழுமனதுடன் எனது ஆதரவை வழங்குவேன்” என்றும் கூறினார்.

“டத்தோ சிவராஜ் முழுமூச்சுடன் கேமரன்மலையில் சேவையாற்றினார். அவரின் அச்சேவைகளை மக்கள் என்றும் நினைவுக் கூருவர்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்ட முருகையா, “மாற்றத்திற்காகவே மக்கள் உங்கள் அரசாங்கத்தை தேர்வு செய்தனர். குறிப்பாக இந்தியர்கள் உங்களின் ஆசை வார்த்தைகளை நம்பினார்கள். ஆனால் அந்நம்பிக்கை இன்றுவரை ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ஆகவே ஆட்சி மாற்றத்திற்காக நீங்கள் இந்தியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும்” என்று  குலாவுக்கு நினைவூட்டினார்.

இன்றைய பொருளாதார சூழலில் மலாய், சீனர், இந்தியர் என அனைத்து சமூகத்தினரும் திண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் பல நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வதும் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோ டி. முருகையா.