சென்னை – முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் இன்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களில் திமுக நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மே-17 இயக்க நிர்வாகிகள் ஆகியோரும் அடங்குவர்.
இந்தப் போராட்டத்தின்போது தமிழக ஆளுநரை புரோக்கர், ஓட ஓட விரட்டப்பட வேண்டியவர், என மிக மோசமான வார்த்தைகளால் வைகோ விமர்சித்தது ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக இடம் பெற்று வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்டப் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.