ஜோகூர் பாரு – சீ பீல்ட் ஆலய விவகாரத்தைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி ஜோகூர் சுல்தானின் மனைவி பெர்மாய்சுரி சாரித் சோபியா இட்ரிஸ் (படம் – Zarith Sofiah Idris) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆங்கிலப் பதிவில், தங்கள் குடும்பத்தினருக்காக பாடுபட்ட, உழைத்த நான்கு இந்தியர்களைப் பற்றி நன்றியோடும், நெகிழ்ச்சியும், உருக்கமும் கலந்த உணர்வுகளோடும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“எங்களின் நன்றிகள் – எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்ட அந்த நான்கு மலேசிய இந்தியர்களுக்கு” எனத் தலைப்பில் அவர் வரைந்துள்ள அந்தப் பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு:
“எதிர்வரும் டிசம்பர் 5-ஆம் தேதியோடு எனது மகன் ஜலீல் மறைந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. அவன் மறைந்தது முதல் நாங்கள் அடைந்திருந்த சோகம் இன்னும் குறைந்தபாடில்லை. இன்னும் அந்த சோகத்தில் மூழ்கியிருக்கிறோம்.

ஆனால், இந்த ஆண்டு அந்த சோகம், மற்றொரு சோகத்தோடு சேர்ந்த கலவையான சோகமாகியிருக்கிறது. இன சகிப்புத் தன்மையற்ற நிலையும், கருத்து வேறுபாடுகளும் மீண்டும் மக்கள் மத்தியில் முன்னுக்கு வந்திருக்கிறதே என்ற சோகம்தான் அது!
சுபாங் ஜெயாவிலுள்ள இந்து ஆலயத்தில் அண்மையில் நடந்த கலவரங்கள் – அதில் ஒரு மலாய் தீயணைப்பு வீரர் கடுமையானத் தாக்குதலுக்கு இலக்கானது – அதைத் தொடர்ந்து இனப் பதட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது – போன்ற சம்பவங்களுக்கிடையில் எனது நினைவெல்லாம் எங்களின் இந்திய நண்பர்கள் மற்றும் எங்களின் இந்திய பணியாளர்கள் குறித்தும் – எங்களின் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகி விட்ட அவர்களைப் பற்றியும் – சென்றன.
உடனடியாக எனது நினைவுக்கு வந்தவர் டத்தோ சுப்ரமணியன் பாலன் மற்றும் டத்தோ சிங்காரவேலு. அவர்கள் இருவருமே எங்களின் குடும்ப மருத்துவர்கள். எனது மகன் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தபோது அவனைக் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்ற முக்கியமான மருத்துவர்கள் இவர்கள் இருவரும்.
கடந்த பல ஆண்டுகளில் எனது கணவரோ, அல்லது என் குழந்தைகளோ நடு இரவுகளில் உடல் நலம் சரியில்லாமல் போன தருணங்களில் எல்லாம் இந்த இரண்டு மருத்துவர்களில் ஒருவர்தான் உடனடியாக விரைந்து ஓடிவந்து உரிய சிகிச்சைகளை வழங்கிச் செல்வர். எந்த நேரம், காலம் என்று அவர்கள் எப்போதுமே பார்த்ததில்லை. நள்ளிரவுக்கு முன்பாக இருந்தாலும், அதிகாலை 3 மணியாக இருந்தாலும் அவர்கள் எப்போதுமே விரைந்து வந்திருக்கிறார்கள்.
எனது மகன் ஜலீல் கல்லீரல் புற்றுநோய் கண்டிருக்கிறான் என்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, இந்த இரண்டு மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் எனது மகன் மிகவும் சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தான். காரணம், அவனது சிறுவயது முதல், எங்கள் குடும்பத்தினருக்கு சிகிச்சை வழங்க இந்த இரண்டு மருத்துவர்கள்தான் அடிக்கடி வந்து செல்வதை அவன் பார்த்திருக்கிறான். அதனால் அவர்கள் இருவரும் அவனுக்கு நன்கு பரிச்சயமான, நட்புறவான முகங்களாயினர். அவனும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தான்.
ஜலீன் தனது இறுதி மூச்சை விட்டபோது, அதைக் கண்காணித்து அவன் இறந்த நேரத்தை கடிகாரத்தைப் பார்த்து உறுதிப்படுத்தியவர் டத்தோ பாலன்தான்.

மற்றொரு இந்தியர் மோகன். எங்களின் மூத்த மகன் துங்கு மக்கோத்தா ஜோகூர், ஒருவயதாக இருக்கும்போது, எனது கணவர் ஸ்டுலாங் லாவுட் என்ற இடத்தில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் அவனைக் கவனித்துக் கொண்டது மோகன்தான்.
இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் எங்களின் எல்லாக் குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தது மோகன்தான். அவர்கள் எப்போதும் நீச்சலுக்கு செல்வதாக இருந்தால், மோகன்தான் அவர்களைப் பார்த்துக் கொள்வார். அவர்களோடு மணிக்கணக்கில் நீச்சல் குளத்திலேயே தண்ணீருக்கு நடுவில் இருப்பார்.
எனது குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சியாளர், சக விளையாட்டாளர், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ‘ஆயா’ என எல்லாப் பணிகளையும் மோகன் பார்த்தார்.
எனது குழந்தைகள் சிறுவயதினராக இருந்தபோது, என் கணவர் வீட்டில் இல்லாத தருணங்களில் நான் மோகனைத்தான் எங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்வேன். காரணம், எனது சிறுகுழந்தைகளும், பெண்களாகிய வேலைக்காரிகளும் மட்டுமே நிறைந்திருந்த எனது இல்லத்தில் நான் தனியாக இருக்க அச்சப்பட்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம், காலையில் மற்ற பணியாளர்கள் எல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை மோகன் தூங்காமல் விழித்திருந்து பார்த்துக்கொள்வார். எனது உயிர் மட்டுமின்றி, எனது பிள்ளைகளின் உயிரையும் பாதுகாக்க அவரை நான் பெரிதும் நம்பினேன்.

நினைவுக்கு வரும் இன்னொருவர் டத்தோ சுகுமாரன். எனது கணவரின் காவல் துறை (போலீஸ்) பாதுகாவலர். அவர் எப்போதுமே என் கணவர் மீது அன்பையும், விசுவாசத்தையும் செலுத்தியதோடு, அதனை நிரூபித்தும் வந்தவர்.
அவர் மீது அடிக்கடி வசைமாறிகள் பொழியப்பட்டாலும், எப்போதுமே அவர் என் கணவருக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டிருக்கிறார்.
2009-ஆம் ஆண்டில் நான் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்தபோது, எனது இளைய மகனோடு சரி சமமாக விளையாடி அவனைப் பார்த்துக் கொண்டதோடு, அவன் மரங்களில் இருந்து ஆப்பிள் பழங்களைப் பறிக்கவும் சுகுமாரன் உதவி செய்வார். அல்லது பூங்காவில் இருந்த வாத்துகளுக்கு அவன் உணவளிக்க அவர் உதவி புரிவார்.
எனக்கும் என் கணவருக்கும் மற்ற இனங்களைச் சார்ந்த பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆனால், இப்போது நாட்டில் அனைவரின் பார்வையும் மலேசிய இந்தியர்களை நோக்கியே இருப்பதால், இந்த நான்கு இந்தியர்கள் பற்றியும் குறிப்பிடுவது முக்கியம், சாலச் சிறந்தது என நான் கருதினேன். அவர்களுக்காக எங்களின் குடும்பத்தினரின் சார்பில் ஆயிரமாயிரம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டில் அமைதி நிலவ எல்லாம் வல்ல அல்லா அருள்புரிவாராக! நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற முறையில் ஒருவரையொருவர் நேசிக்க நமது இதயங்களில் அன்பை விதைப்பாராக!
(படங்கள் – நன்றி – மாட்சிமை தங்கிய ஜோகூர் சுல்தானா முகநூல் பக்கம்)