
கோலாலம்பூர்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாற்றங்களை முன்னெடுப்பதில் தோல்வியுற்றால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் (Pakatan Harapan) மக்களிடமிருந்து நம்பகத்தன்மையை இழந்து விடும் என்று முன்னாள் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர், அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாகவும், மனித உரிமைகளை நிலை நிறுத்துவதாகவும் விடுக்கப்பட்ட வாக்குறுதிகளை கருத்தில் கொண்டே மக்கள் தேசிய முன்னணிக்குப் பதிலாக நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்தனர் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி அனைத்து மாற்றங்களையும் நிலை நிறுத்த வேண்டுமெனில், அரசாங்க பிரதிநிதிகள், சமுதாய உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் மன்றம் உள்ளடக்கிய மாற்றுக் குழு ஒன்றை நம்பிக்கைக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அம்பிகா பரிந்துரைத்தார்.
மரணத் தண்டனையை இரத்து செய்வதாகக் கூறி, பின்பு அதனை அகற்றாமல் தாமதிப்பது வருத்தமளிப்பதாகவும், இதற்கு முன்னமே 142 நாடுகள் இத்தண்டனையை அகற்றி விட்ட நிலையில் நாம் ஏன் சாக்கு போக்கு சொல்ல வேண்டுமென்று அவர் வினவினார்.
வருகிற டிசம்பர் 10-ம் தேதி அனைத்துலக மனித உரிமைகள் தினம். அத்தினத்தில் மரண தண்டனையை அகற்றும் சட்ட மசோதாவை மக்களவை நிறைவேற்றும் என நம்புவதாக அம்பிகா தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 10-ம் தேதி மக்களவையில் எல்லா வகையான குற்றங்களுக்குமான மரண தண்டனைகளும் ஒழிக்கப் படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.