Home உலகம் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

1170
0
SHARE
Ad

சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை சிகாகோவில் நடைபெறவுள்ளது. 

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தவுள்ள இம்மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும் என உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் டான்ஸ்ரீ .மாரிமுத்து (படம்) நிருபர்களிடம் கூறினார்.

இம்மாநாட்டில் பேராசிரியர்கள் உலகநாயகி பழனி, ஒப்பிலா மதிவாணன், .மருதநாயகம், அபிதா சபாபதி, அரங்க பாரி, பெ.அர்த்தநாரீஸ்வரன், மருதூர் அரங்கராசன், .ஜெயதேவன், .மகாலிங்கம், ரவீந்திரநாத் தாகூர், புவனேஸ்வரி, கமலி, இரா.மோகன் மற்றும் நந்தன் மாசிலாமணி ஆகிய 14 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வுக்கட்டுரைகளை தேர்வு செய்ய உள்ளனர்.

#TamilSchoolmychoice

1966-ல் உலகத் தமிழ் மாநாட்டை, ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவருமான தனிநாய அடிகளார் கோலாலம்பூரில் முதன் முதலில் நடத்தினார்.

அதனை அடுத்து 1968-ம் ஆண்டில் சென்னையிலும், பின்பு பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், போர்ட் லூயிசு, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன என இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழுவின் பொறுப்பாளரும் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் கூறினார்.

தற்போது இம்மாநாடு குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டுக்குச் சிறப்பான கட்டுரைகள் வர வேண்டும் என்பதற்காக உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களுக்கும்  எழுத்தாளர்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  முதன்முறையாக அமெரிக்க மண்ணில் நடைபெறவுள்ளதால் தமிழ் மொழி வளர்ச்சி வரலாற்றில் இம்மாநாடு முக்கிய இடம்பெறும் என நம்பபடுகிறது.