Home அரசியல் மலேசிய இந்தியர்களின் வளர்ச்சிக்காக 14 அம்சத் திட்டத்தை ஜ.செ.க வெளியிட்டது

மலேசிய இந்தியர்களின் வளர்ச்சிக்காக 14 அம்சத் திட்டத்தை ஜ.செ.க வெளியிட்டது

658
0
SHARE
Ad

470x275xf9419ed43bb0063f6addb1378208b99e.jpg.pagespeed.ic.ufv_yO2bRz

ஜோகூர் பாரு, ஏப்ரல் 1 – ஜோகூர் பாருவில் நேற்று ஜ.செ.க கட்சியின் சார்பாக மலேசிய இந்திய சமூகத்தினரின் வளர்ச்சிக்காக 14 அம்சத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 14 அம்சத் திட்டத்தில், மலேசியாவில் அடிப்படை வாழ்வாதாரங்கள் இன்றித் தவிக்கும் ஏழை இந்திய சமூகத்தினரின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்து, அவர்கள் இந்த சமூகத்தில் எல்லா வசதிகளையும் பெற்று முன்னேறும் வகையில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

மேலும், ஜ.செ.க வெளியிட்டுள்ள இந்த 14 அம்சத் திட்டம், பக்காத்தானின்தேர்தல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சில திட்டங்கள் அவற்றில் இருந்து மாறுபட்டு இந்தியர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன.

அந்த 14 அம்சத் திட்டம் பின் வருமாறு,

மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் வாழ்வாதாரங்கள் இன்றித் தவிக்கும் ஏழை இந்திய சமூகத்தினரின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்

இந்திய தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, தேசிய வீட்டு வசதி வாரியம் மூலம் தரமான மற்றும் மலிவுவிலை வீடுகள் கட்டித்தரப்படும்.

அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு,அவற்றின் கல்வித்தரம் தேசிய அளவோடு ஒப்பிடும் வகையில் உயர்த்தப்படும்

குறைந்த வருமானம் உள்ள இந்திய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தொழிற்பயிற்சி திட்டங்களில் இணைந்து தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை பயிற்சி முறைகளை கற்க வழி செய்யப்படும்.

RM1,100 ஊதிய திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் குறைந்த வருமானம் உள்ள இந்தியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்.

அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பொது சேவைகளில்  பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இந்து கோயில்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு அவை தகுந்த முறையில் பராமரிக்கப்படும்.

கடனுதவித் திட்டங்கள் மூலம் சிறு தொழில் செய்யும் இந்திய பெண்கள் மற்றும் இளைஞர்களின் தொழில் முன்னேற்றதிற்கு உதவி செய்யப்படும்.

காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் மர்மமான முறையில் இறப்பது போன்ற மனித உரிமை மீரல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

நாட்டில் அதிக இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

இந்திய சமூகம் எதிர்நோக்கும் வறுமை மற்றும் அனைத்து சமூக பிரச்சினைகளையும் ஒழிக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.

வீட்டில் தனித்து வாழும் தாய்மார்களுக்கு பொருளாதார ரீதியில் உதவ நிதி ஒதுக்கப்படும்.

தோட்ட மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களை சேர்ந்த சிறந்த இந்திய மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.

பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் உருவாக்கப்படும் போன்ற திட்டங்கள் அந்த 14 அம்சத் திட்டத்தில் இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் மற்றும் ஜ.செ.க கட்சியின் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் சந்தயாகு, எம்.மனோகரன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.